Tuesday, 24 November 2009

வெருகல்






  1. மூதூர் பகுதியில் அழகிய முல்லைக்கிராமம் வெருகல். மகாவலிகங்கையின் வற்றாத நீர் வளத்தால், எங்கும் பச்சை வண்ணம் போர்த்தியிருக்கும் பசுமைப்பூமி. இயற்கை வளம் மிகுந்திருந்ததால் மட்டும் வெருகல் சிறப்புப் பெற்றிருக்கவில்லை. மகாவலியின் தீரத்தில், வேலாயுதப்பெருமானாக வீற்றிருக்கும், சித்திரவேலாயுதசுவாமி கோவிலாலும், அதன் அருட்பெருமையாலும் கூடப் பெருமைபெற்றது வெருகல்.

    ஈழத்தின் வடபுலத்திலோ, அல்லது பிறபாகங்களிலோ, கடல்கடந்து தமிழகத்திலோ, கதிர்காம் பெற்றிருந்த முக்கியத்துவம் வெருகல் முருகனுக்குக் கிடைக்கவில்லை. ஆனால் கதிர்காமத்தைவிட பன்மடங்கு சக்தி வாய்ந்த ஒரு தமிழர் திருத்தலம் வெருகல். அந்தத்தலத்தில் சுமார் இருபத்தைந்து வருடங்களின் முன் நான் கண்ட ஒரு சமய விழுமியத்தைத்தான் இங்கு பண்பாட்டுக்கோலமாக வரையவுள்ளேன்.

    மிகுந்த அமைதியாக இருக்கும் வெருகல் கிராமம், ஆவணி மாதம் வந்தாலே குதுகலம் கொள்ளத் தொடங்கிவிடும். சனங்களின் நடமாட்டத்தில் அதிகரிப்பு, தற்காலிக கொட்டில்கடைகள், தற்காலிக கழிவறைகள், என மெல்ல மெல்ல மெருகு சேரும்.

    ஆம், இம்மாதத்தில்தான் வெருகல் பதியுறை சித்திரவேலாயுதசுவாமி கோவில் திருவிழா பதினெட்டு நாட்கள் நடைபெறும். பத்தொன்பதா நாள் காலையில், மகாவலி கங்கையில் தீர்த்தம். இந்த இருநாட்களும் திருகோணமலையின் கொட்டியாரப்பற்றே வெருகலில் திரண்டு வந்திருக்கும். இருநாட்களும் விசேடமானவையே. அதில் என்னைக் கவர்ந்தது, பதினெட்டாம் நாள் நள்ளிரவில் நடைபெறும் அந்த வைபவமே.

    வேடுவர் குலப் பெண்ணான வள்ளியை மணம்புரிந்ததனால், வேடுவர் குலத்துக்கு மாப்பிள்ளையாகிய முருகனுக்கு, காட்டிலுறை வேடுவர்கள் சீர் கொண்டுவரும் சிறப்பான நிகழ்வு அது. உண்மையில் அப்போது வெருகல் காட்டுப்பகுதியில் வேடுவ சமூகம் சொற்ப அளவில் வாழ்ந்து கொண்டிருந்தனர். அதுபோல் பிபிலை காடுகளிலும் வாழ்ந்தனர். இவ்விதம் வேடுவர்கள் சீர் கொண்டு வருவார்கள் என்பதைக் கேள்விப்பட்டதுமே, எனக்கு ஆவல் அதிகரித்து விட்டது. காரணம் வேடுவரை நேரில் பார்க்கும் ஆவல்தான்.

    நள்ளிரவு ஆகிற்று. ஆலயத்தில் பூசைகள் எதுவும் தொடங்கவில்லை. ஏனெனில் வேடுவர்கள் கொண்டுவரும் சீர்ப் பொருட்களிலிருந்துதான் அன்றைய பூசைக்குத் தேவையான முக்கிய பொருட்கள் எடுக்கப்பெறும் என்றார்கள். ஆலயவாசலில் கோவில் பணியாளர்கள் அவர்களை எதிர்கொண்டழைக்க, வேண்டிய உபசாரங்களுடன் காத்திருந்தார்கள். மக்கள் கூட்டம் காட்டுப்பகுதியை, நோக்கிய வண்ணமேயிருந்தார்கள்.
    பறைகளின் அதிர்வொலி கேட்கத்தொடங்கின. காரிருளில் கறுத்திருந்த வனத்திடையே சின்னச் சின்ன ஒளிச்சிதறல்கள் தெரிந்தன. தீப்பந்தங்களின் ஒளி தெளிவாகத்தெரியத் தொடங்க மக்கள் கூட்டம் காட்டுப் பகுதியை நோக்கி நகர்ந்தது. காட்டிலிருந்து பிரகாசமான தீப்பந்தக்களுடனும், அதிரும் கொட்டுப் பறைகளுடனும், வேடுவர்கள் வெளிபட்டனர்.

    மேலங்கி அற்ற, முழங்காலுக்கு சமீபமா உயர்த்திக்கட்டிய உடுதுணி, கையில் கம்பு, என்பவற்றுடன் எட்டு அல்லது பத்துப்பேர்கள் வந்தார்கள். ஒருவருடைய தலையில் ஒரு துணியால் மூடிக்கட்டிய பெட்டி இருந்தது. அதுதான் சீர்ப்பெட்டி என்பது சொல்லாமலே புரிந்தது. மிக வேகமாக நடந்து வந்தவர்களை, ஆலய பணியாளர்களும், எதிர்கொண்டழைத்துச் சென்றார்கள். ஆலய வாசலில் வைத்து, வந்தவர்களின் கால்கள் கழுவப்பட்டு, ஆலயத்துள் அழைத்துச் சென்றனர். ஆலயத்தின் உட்பகுதிக்கு அவர்கள் சென்றதும், இடைக்கதவு மூடப்பட்டது. அதன்பின் உள்ளே நடப்பது எதுவும் நாங்கள் பார்க்க முடியாது. அந்த ஆலயத்தின் வழக்கமே அதுதான். அபிஷேகமோ, பூசையோ, எதுவும் வெளியாட்கள் பார்க்க முடியாது. அந்த ஆலயப்பணியாளர்கள் மட்டுமே உள்ளே செல்ல முடியும்.
    பூசைகள் எல்லாம் முடிந்து, சுவாமி வீதிவலம் வரும்போது மட்டும் பார்க்க முடியும். அதுவும் கதிரகாமம் போன்று ஒரு பெட்டியை, வெள்ளைத் துணியால் யானை போன்ற பாவனையில் மூடி எடுத்துவருவார்கள். ஒரு சொற்ப நேரத்துக்குள் வீதிவலம் முடிந்துவிடும். ஆனால் அந்தச் சொற்ப நேரத்துக்குள் எத்துனை மகிமை நிறைந்திருக்கும்.

    இப்போ வேடுவர் கொண்டு வந்த சீர்ப் பெட்டிக்குள் என்ன இருந்திருக்கும் என்பதை அறிய உங்களுக்கு ஆவலாக இருக்கிறதல்லவா? எனக்கும் அப்படித்தான் இருந்தது. கோவில் பெரியவர் ஒருவரிடம் விசாரிக்க, அவர் சொன்ன பதில், தேன், தினைமா, வள்ளிக்கிழங்கு, ஈச்சம்குருத்து, நாவல்பழம், அல்லிப்பூ, என்ற ஆறு பொருட்களே வேடுவர் தங்கள் மாப்பிள்ளை முருகனுக்கு கொண்டு வரும் சீர்ப்பொருட்கள் என்றார். அறுமுகனுக்குப் பிடித்த அத்தனையும் இருக்கிறதே. இதுவல்லவோ இணையற்ற சீர்வரிசை என எண்ணத் தோன்றியது.


No comments:

Post a Comment