Saturday, 5 December 2009

அருள் சுப்ரமணியத்தின் விடியும் நாவலில் வெருகல்

வெருகலம்பதி நினைவுக்கு வரும்போது கூடவே வெருகல் ஆறும் வரும். பக்கமாய் ஓடும் ஆற்றின் இருப்பு ரம்மியமானது. மற்றும்படி குக்கிராமத்து கோயில்தான். வேலையற்று சோம்பிப் படுத்துக் கிடக்கிற இளைஞனைப் போலவே சத்தமில்லாமல் ஐயோ பாவம் போல இருப்பார் முருகன். வருச உற்சவம் தொடங்கி விட்டால் கொடியேற்றத்திலிருந்து தீர்த்தம் வரை புதுமாப்பிள்ளைதான்.

ஓரு கற்பூரம் ஒரு சிறங்கை எண்ணையுடனான தீபங்காட்டலும் இரண்டு திரணை வெண்பொங்கல் இரண்டு வாழைப்பழம் கொண்ட சிறு படையல், தட்சனையில்லாத கோயில் கணக்கு அர்ச்சனை.. .. .. இப்படி மட்டுப்படுத்தப்பட்ட ஆராதனையில் வருசம் முழுக்க ஆண்டியாக இருக்கும் முருகனுக்கு அந்தப் பதினெட்டு நாட்களும் ராஜ உபசாரம்.

ஏழெட்டுத் தரம் வந்திருப்பான். வந்து தங்கியிருக்கும் நாலைந்து நாட்களும் சுற்றுலாவிற்கு வந்தது போலவே தோன்றும். ஏறி இறங்கி பயணித்து வந்த அலுப்புக்கு முதல்நாள் ஓய்வு. அடுத்தநாள் பொழுது புலர்வதற்கு முன்பே மூலஸ்தான முன்றலில் பொங்கல் முடிந்துவிடும். ஒவ்வொரு முறையும் அவனுக்குத்தான் மொட்டை விழும். காவடி எடுப்பதும் அவன்தான். அம்மா கற்பூரச்சட்டி எடுப்பாள். கற்பூரம் போட்டுக் கொண்டே வருவார் அப்பா. நெற்றியில் வீபூதி பூசி ஐயர் காவடியை இறக்கியதும் முதல் காரியமாக அம்மா பசிக்குது என்பான்.

அதற்குள் கிராமத்துப்பிள்ளைகள் பொங்கல் வாங்குவதற்காக தட்டோடு காத்திருப்பார்கள். ஐயரின் அர்ச்சனையில் வடைமாலை மோதகம் எல்லாம் கிடைக்க அங்கேயே வரிசையாக குந்தியிருந்து பொங்கலை ஒரு பிடிபிடிக்க வெறும்வயிற்றில் காவடி சுற்றிய களைப்பெல்லாம் பறந்தோடிப் போகும்.

உற்சவத்தின் முதல் நாலைந்து நாட்களின் போதே போய் வந்துவிட வேண்டும் அம்மாவுக்கு. தீர்த்தத்தை அண்டிப் போனால் மண்போட்டால் மண் விழாத சனம் என்பாள். ஆரம்ப நாட்களில் போவதன் அனுபவமே வித்தியாசம்தான். மெல்ல மெல்ல மலர்கிற உதயம் போல மெல்ல மெல்ல களை கட்டுகிற உற்சவ ஆயத்தங்கள் - கோயில் சத்திரத்தில் சிபார்சில்லாமல் கிடைக்கும் தனியறை. புதிதாக அமைக்கப்படும் தண்ணீர், கழிப்பிட வசதி. சேறாக்கப்படாத தீர்த்தக்கரை. அக்கம்பக்க கிராமங்களிலிருந்து அப்பப்ப தேவைக்கேற்ப பறிக்கிற பச்சைக் காய்கறிகள். பார்த்திருக்கக் கறக்கிற பசும்பால். கட்டித்தயிர், காட்டுத்தேன் .. .. இப்படி எல்லாமே புதுசுதான். விலையும் மலிவு. அதற்குள்ளும் அம்மா சதக்கணக்கில் பேரம் பேசுவாள். என்றாலும் நேர்த்திக்கடன் எல்லாம் திருப்தியாக முடிந்து நிம்மதியாக விட்டுக்குப் புறப்படுகிற போது வளைத்து நிற்கும் கிராமத்துப் பிள்ளைகளின் கைகளில் ரெண்டு ரூபாய்த்தாள் செருகி விட்டுப் போக அம்மா மறந்ததில்லை.

நிற்கிற ஐந்து நாட்களும் இரட்டை மாட்டு வண்டி பூட்டி அக்கம்பக்கக் கிராமங்களிலிருந்து அள்ளும்படும் சனங்களை வேடிக்கை பார்ப்பதும், அப்பாவின் கண்காணிப்பில் ஆற்றில் தப்படிப்பதும், சமையல் அடுப்புக்கு சுற்றியுள்ள பற்றைக் காடுகளில் ஓடியோடிச் சுள்ளிகள் சேகரிப்பதும், இலந்தை மரங்களுக்கு கல் எறிவதும், ஓயாமல் எதையாவது உண்பதும் ஓடியாடி விளையாடுவதும், புதிது புதிதாகத் தோன்றும் கடைகண்ணிகளில் குந்தியிருந்து விளையாட்டுச் சாமான்கள் ஆராய்வதும், விலை கேட்பதும், பலூன் வாங்கி உடைப்பதுமாய் அந்த ஐந்து நாட்களும் எப்படிப் போனதென்றே தெரியாமல் போகும்.

புறப்படும் கடைசிநாளன்று மணிக்கடைப்பக்கம் தன் பார்வையைச் செலுத்துவாள் அம்மா. வீட்டுக்காகிய, முக்கியமாக அடுப்படிப் பாத்திரங்களை அம்மா வாங்கிச் சேர்க்கும் அழகே அழகு. அலுமினியத்தட்டுகளுக்கு கடைக்காரன் ஐம்பது ரூபாய் சொன்னால் அம்மா கூச்சமில்லாமல் சரிபாதி விலை கேட்பாள். எவ்வளவு இழுபறிப்பட்டாலும் கடைசியில் அம்மா கேட்கும் விலைக்கே அவன் கொடுக்க வேண்டியிருப்பது பெரிய மாயம்

No comments:

Post a Comment