Sunday, 7 November 2010

சேனையூர்

தாய் நிலத்தின் நினைவுகள்

சேனையூர்
தௌ;ளுதமிழ்ச் சொல்
உச்சரிக்கும் போதே
உவகை உச்சிவரை மூட்டும்
முன்னோர்கள்
எம் முன்னோர்க்கும்
முன்னோர்கள் வாழ்ந்து வந்த
எங்கள் வளம் கொளிக்கும் கிராமம்

ஏழைகட்கு வாழ்வளிக்கும்
மீன் வளத்தை தான் சுமந்து
உப்பு நீர் கடலிருந்து உட்புகுந்து
வளைந்து நெளிந்து
முப்புறமும் சூழ்ந்து
எப்பொழுதும் அரணாக
இயற்கை தந்த கொடை

பழந்தமிழ் மணம் வீச
பண்பாடு காத்து பண்போடு
கலாசாரப் பெருமை காத்து
முத்தமிழ் கலை வளர்த்து
புத்தெழுச்சியோடு உத்வேகம்கொண்ட
உயிர்த் துடிப்புள்ள கிராமம்

காடும் மேடும் திருத்தி
களனிகளாய்ச் செப்பனிட்டு
வாழ்வளித்த உழவர் நாழும்
வலம் வந்த மண்

இன்று நார்நாராய் கிழிபட்டு
வேரோடு சாய்ந்த மரமாய்
மரணப்படுக்கையில் மண் மகள்
ஓடி வருகிறோம் வாரியணைக்கிறோம்
கண்ணீரை இறைத்துக் களைத்து
எம் சென்னீரை வியர்வையாக்கி
சிறுகச் சிறுக மெருகூட்டுகிறோம்

Saturday, 6 November 2010

சம்பூர் பத்திரகாளி ஆயிரம் வருசங்கள் பழமையானது


காளிதேவியின் கனவுக் கூடாரம்
கலைந்த படியே கிடக்கிறது
வீணைநரம்புகள் விம்மியபடியே
நெற்றிப் புருவங்கள் சுழிக்கின்றன
பால் நிலவு அங்கு எறிப்பதில்லை
காலடி விளக்குகள் ஒளிர்வதில்லை
சதங்கையின் சங்கீதம் பிறப்பதில்லை
குந்தியிருந்த படியே
காற்றிலே கரைந்து போகிறேன்

வாழ்விடம் முழுவதும் வலிய இருள்
நெஞ்சங்கள் நிறைந்த கீறல்கள்
கட்டிக் கொண்ட புண்களாய்
இதயங்கள் கொதிப்படையும்
தாமரைக் குளக்காற்றோ
சுட்டெரிக்கும் சூரியனாய்;
மண்ணில் பட்டு மரத்துப்போகும்
கால் நடைகளின் கண்களில்
காய்ந்து போன கண்ணீர்த்துளிகள்
சொந்தங்களைத் தேடியதனால்
சோர்ந்து போன நடைப்பவனி
இரைந்து கொண்டிருந்த கடல்
மௌனம்காத்து அடங்கிப் போகிறது
மீண்டும் ஒரு சுனாமிக்காய்