





சேனையூர் நாகம்மாள் ஆலயம் கொட்டியாரப் பிரதேசத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயம்.திருகோணமலைத் திருக்கோயில்கள் எனும் நூலில் இதன் வரலாறு பதிவாகியுள்ளது.இந்துசமய கலாசார அமைச்சு இதை வெளியிட்டிருந்தது. பண்டிதர் வடிவேல் இந்த ஆய்வு நூலை ஆக்கியவர். அற்புதம் நிறைந்த சேனைய+ர் ஸ்ரீ நாகம்மாள்
ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா!
நாட்டிலுள்ள ஆலயங்களின் வரலாறுகளில் பல அற்புதங்களையும் தெய்வீக அனுபவங்களையும் அருட் காட்சிகள் பற்றியும் கேள்விப்படுகின்றோம். அவை புராணங்களாகவும், கர்ண பரம்பரைக் கதைகளாகவும், ஒளி, ஒலி, செய்தி ஊடகங்கள் வாயிலாகவும் எம்மை வந்தடைகின்றன.
அவற்றை அறிந்து பார்த்து மெய்சிலிர்க்கின்றோம், அவ்வாறான தெய்வீக அனுபவங்களை நாமும் பெறமாட்டோமா? எங்கள் கண்முன்னே அவைகள் நிகழாதா? என ஏங்குகின்றோம். ஆனால் அவ்வாறான அற்புத நிகழ்வுகள், இப்போதும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன.
கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் என நடமாடும் தெய்வமென அற்புதங்கள் வழங்கி அருள் மழை பொழிபவள் தான் நாகம்மாள். இவ்வாறான புகழுக்கும் போற்றுதலுக்கும் பெயர்போன ஆலயந்தான் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்குப் பிரதேசத்தில் கட்டைபறிச்சான் வடக்குப் பகுதியில் இயற்கை எழில் சூழவிளங்கும் சேனையூர் திருப்பதியில் கோயில் கொண்டு எழுந்தருள் பாலிக்கும் அருள் ஸ்ரீ நாகம்மாள் ஆலயமாகும்.
இவ்வாலயம் கடந்த 2006 ஏப்ரலில் ஏற்பட்ட யுத்த சூழலினால் மக்களில் அனேகர் இடம்பெயர்ந்தபோதும், 2006ம் வருட வருடாந்த வைகாசிப் பொங்கல் விழாவை யுத்த வீதிக்கு மத்தியிலும் ஆலய நிர்வாகமும் அர்ச்சகரும் சிறப்பாக செய்து முடித்தமை குறிப்பிடத்தக்கதாகும் அன்றியும் 2006 ஆகஸ்ட் வரையும் வாராந்த ஞாயிற்றுப் பூசைகள் நடந்து வந்தமையும் குறிப்பிடத்தக்கவொன்றாகும்.
பரந்து நிழல்பரப்பி ஆலய முன் முகப்பில் விழுதுகள் விட்டு காட்சி தரும் ஆலமரத்தை தலவிருட்சமாகக் கொண்ட இவ்வாலயம், சுற்றிவர வெண்மணல்கள் பரவியுள்ளது. பக்கமெல்லாம் குருந்தை, பாளை, நெய்க்கொட்டை, விண்ணாங்கு வேம்பு மரங்கள் நிரல் பரப்பி நிற்கும் இயற்கை எழில் சூழ்ந்த அழகிய இடத்தில் அமைந்திருப்பதும் அற்புதக் காட்சியாகும். இவ்வாலய அமைப்பைப் பற்றி பாடிய கும்மிப் பாடலில் ஒன்றை குறிப்பிடுவது பொருத்தமென்று எண்ணுகின்றேன்.
பாலை குருந்தையும்
பாங்குடன் ஆலையும்
பக்கமெல்லாம் மரச்சோலைகளும்
கூடியே வீதியைக் கூடாரம்போல் சுற்றி
கூட்டமாய் நிற்பதைப் பாருங்கடி!
புலவரின் வரிகள் ஆலயம்அமைந்துள்ள பதியின் அழகை சித்தரிக்கிறது அல்லவா? இற்றைக்கு 100 வருடங்களுக்கு மேலாக இவ்வாலயம் வரலாற்றுச் சிறப்புடன் பக்தி பூர்வமான பூசை நிகழ்வுடன் வாராந்தம் ஞாயிறு நாட்களிலும் வருடாந்தம் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தை அண்டி வரும் பூரணை தினத்தினை ஒட்டியும் வரும் பூர்வபட்சம் வளர்பிறையில் வரும் ஞாயிறு தினத்தில் வருடாந்தப் பொங்கல் விழா பெருவிழாவாக நடைபெற்று வருவது ஆலயம் தோன்றிய காலம் முதலாகும்.
பாம்புக் கோயில்களில் பிரசித்தி பெற்றதாக கிழக்கிலங்கையிலே மிகவும் அற்புதமாகப் பேசப்படும் இக்கோயில் வரலாறும் அதன் மகிமை பற்றியும் யாழ்ப்பாணம் சித்தன்கேணி பண்டிதர் த. சுப்பிரமணியம் அவர்களால் நாகதம்பிரான் மான்மியம் என்ற நூலில் எழுதப்பட்டுள்ளதையும் திருகோணமலை பண்டிதர் வடிவேலயய்யா அவர்கள் திருகோணமலை மாவட்ட கோயில் வரலாறுகளில் இவ்வாலயமும் சேர்க்கப்பட்டிருப்பதையும் இவ்வாலயத்தின் புகழ் பரவுவதற்கு காரணமாய் அமைந்திருப்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
ஆகம ரீதியான கோயில் அமைப்போ, ஆகம விதியான பூசைகளோ இவ்வாலயத்தில் இல்லை. ஆலய மூலஸ்தானம் சிறிய ஆசி வடிவிலானது. இதுவே 100 வருடங்களுக்கு முன் ஸ்தாபிக்கப்பட்டதாம். அது அப்படியே தான் இன்றும் இருக்கிறது. இதன் பின்புறம் ஒரு புற்றும், இதனைச் சுற்றி ஒருவில் வளைவுடனான சுற்று மதிலும் கட்டப்பட்டிருக்கிறது.
இந்த மதிலுக்குள் அமைந்துள்ள புற்று வாயிலாகவே ஆலயப் பூசகர் ‘நாகம்பாளுக்கு பால் பழக்கரைசல்’ வைப்பார். இப்பால் பழப் பூசை காண வார ஞாயிறு நாட்களிலும் வருட வைகாசிப் பொங்கல் நாளிலும் முண்டியடிக்கும் பக்தர்கள் அனேகர். அருளுள்ளோம் கண்களுக்கு நாகதெய்வம் அருட்காட்சி கிடைப்பதுண்டு. நாக தெய்வத்தைக் கண்டவர்கள் அருட்பேறு பெற்றவர்கள் தான் என்றால் அது மிகையல்ல.
சேனையூர்ப் பதிக்கே வாருங்கள் - ஸ்ரீ
நாகம்மாளைப் போற்றுங்கள்
தேனாய் இனிக்கப் பாடுங்கள் - தேவி
தெரிசனந் தருவாள் பாருங்கள் என
சேனையூர் கவிக்குயிலன் சேனையூர் ஸ்ரீ நாகம்பாள் மீது பாடிய பாடல் வரி மூலம் அம்பாளின் தரிசனம் பற்றிய சிறப்பு சொல்லப்பட்டுள்ளதை அறியலாம். இவ்வாலயத்தில் மூலமூர்த்தியாக நாக சிலையும், எழுந்தருளியாக அன்னை புவனேஸ்வரி ஐந்து தலை நாகம் குடைபிடித்தாற்போல் காட்சிதர அபய வரதம் காட்டி எழுந்தருளியுள்ளாள்.
இங்கே, வரசித்தி விநாயகர், சூரிய நாராயணர், ஆஞ்சநேயர், பைரவ மூர்த்தி ஆகிய தெய்வங்கள் வெளிப்புறங்களிலும் ஆலய உட்பிரவாகத்தில் சக்திவேல், சந்தான கோபால சுவாமியும் உண்டு.
ஆலய அர்ச்சகர் மஞ்சல் நிறத் துணியினால் வாய், மூக்கு, காதுகளை கட்டிக்கொண்டே நாகதேவிக்குரிய சகல பூசை ரிழிபாடுகளையும் செய்துவருகின்றார். சர்ப்பந் தீண்டிய வர்களுக்கும், விசசம்பந்தமான பிணியாளர்களுக்கும், திருமணத் தடை புத்திர பாக்கியமற்றோருக்கும் விசேடமாக தோச பரிகாரங்கள் பூசகரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நினைத்த காரியங்கள் நிறைவேறவும் நேத்தி வைக்கப்பட்டு அடியார்கள் நிறைவேற்றுவதை நிறையக்காணலாம். இவ்வாலயத்தில் கட்டப்படும் மஞ்சல் நிறவேளை நூலுக்கு மிகவும் மகத்துவமுண்டு என அறியப்படுகிறது.
- சேனையூர் அ. அச்சசுதன்
No comments:
Post a Comment