Friday, 17 December 2010

கொட்டியாரம் வரலாற்று அறிமுகம்


கொட்டியாரம் வரலாற்று அறிமுகம்

ஈழத்தில் புராதனமான வரலாற்று சன்றுகள் நிறைந்த இடங்களில் கொட்டியார பிரதேசமும் முக்கியம் பெறுகிறது. இங்கு கிடைக்கபெற்ற கல் வெட்டுக்கள், சாசனங்கள், இலக்கியங்கள், செப்பேடுகள், பழைய கட்டிட இடிபாடுகள், தொல்மரபுக்கதைகளும் பாடல்களும் இப்பிரதேசத்தின் வரலாற்றை வெளிப்படுத்துகின்றன.

கிறிஸ்துவுக்கு முற்பட்ட சான்றுகள்

பல்லாயிரம் வருடங்களுக்கு முந்தய பழம் தொல் குடி இடப்பெயர்வுகள் இப்பிரதேசத்தில் உள்ள துறைமுகங்களான இளக்கந்தை, இலந்தத்துறை, வெருகல் ஆகியவை பயன்படுத்தப்பட்டமைக்கான சான்றுள் உள்ளன. வெருகல் பிரதேசத்தில் கண்டெடுக்கபட்ட முதுமக்கள் தாழி கிறிஸ்துவுக்கு முற்பட்ட கால மனித நாகரிகத்தை சுட்டி நிற்கிறது. அத்தோடு கறுப்பு சிவப்பு மட்பாண்ட அழிபாடுகள் தொல்பழங்கால மரபை சுட்டி நிற்கின்றன.

கிறிஸ்துவுக்கு முன் உள்ள சன்றுகளில் மிக முக்கியமான இரண்டு கல்வெட்டுக்கள் இங்கு நம் கவனத்தை ஈர்க்கிறது. சேனையூர் கட்டைபறிச்சான் பகுதியில் பள்ளிக்குடியிருப்பு செல்லும் வழியில் அமைந்திருக்கும் கச்சக்கொடி மலையில் காணப்படும் ஒரு கல்வெட்டு தமிழ் பிராமி சாசனமாக உள்ளது

ப ரு ம க தி ச பு த லெனே

சகச சங்கமய

என்பது இதன் வாசகம் இந்த எழுத்துக்களில் ம தமிழ் பிராமிக்குரியதாக உள்ளது இதனை படியெடுத்து வாசித்த தொல்லியல் துறை பேராசியர் க. இந்திரபாலா இக் கல்வெட்டு கி.மு. இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தது என உறுதிப்படுத்தினார். இதே சாயலிலையே வெருகல் சித்திரவேலாயுத கோயிலுக்கு பக்கத்தில் உள்ள ஒரு குன்றில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. இதே வாசகங்களே அதிலும் பொறிக்கப்பட்டுள்ளன. இதுவும் இப்பிரதேசத்தின் முன்னோர்களின் வாழ்வையும் வரலாற்றையும் உறுதிப்படுத்துகிறது.

இலக்கந்தை வேப்பங்குளம் பகுதியில் கூட்டமாக காணப்படும் நடுகற்கள் ஈச்சலம்பற்றைப் பகுதியில் உள்ள கல்வெட்டுக்கள், சீனம்வெளியில் கண்டெடுக்கப்ட்ட சில கல்வெட்டுக்கள் இப்பிரதேசத்தில் தமிழர்களின் தொல் வரலாற்றை மேலும் உறுதிப்படுத்துகின்றன.

எல்லாளன் பற்றி வழக்கிலுள்ள கதை மரபு தொன்ம் சார் நம்பிக்கைகள் ஈச்சலம்பற்றை செம்பொன்னாச்சி அம்மன் சிலையை எல்லாளன் கொண்டுவந்தான் என்ற கூற்றுக்கள் என்பனவும் எல்லாளன் இலங்கைத்துறையில் இறங்கி ஈச்சலம்பற்று வழியாக பள்ளிகுடியிருப்பு வந்து சேனையூரை கடந்து மல்லிகைத்தீவு மணலாறு வழியாக பொலனறுவையை அடைந்து அனுராதபுரம் சென்றதாக அந்தக்கதை நீழ்கிறது.

இப்பிரதேசத்தின் இளக்கந்தை, நல்லூர், வாழைத்தோட்டம், வெருகல், சாலையூர் முதலான பிரதேசங்களில் காணப்படுகின்ற பூர்வ குடிமக்களின் தொடர்ச்சியான இருப்பென்பது இப்பிரதேச வரலாற்றில் அதன் பழமையை மேலும் சான்று பகிர்கிறது.

கிறிஸ்துவுக்கு பிற்பட்ட கால சான்றுகள்

பரந்த காடுகளையும், வயகளையும், மேச்சல் நிலங்களையும் கொண்டிருக்கும் இந்த பிரதேசம் தொடர்ச்சியான நகர்வுகளின் மூலம் இடம் மாறி வாழ்ந்திருக்கிறார்கள் போலத் தெரிகிறது. குடி நகர்வுகள் மாறி மாறி இடம்பெற்றிருக்கின்றன. இன்னமும் பாழடைந்த நிலையிலையே காணப்படுகின்ற நூற்றூக்கணக்கா குளங்களும் அதை அடியொற்றிக்காணப்படுகின்ற மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்களும் குடியிருப்புக்கள் இருந்ததற்கான சான்றாதாரங்களாய் உள்ளன. உலகம் முழுவதும் மனித நாகரீகத்தின் வரலாற்றில் குடி நகர்வுகளின் சிதைவுகளாக இத்தகைய ஆதாரங்கள் தொல்வரலாற்றை உறுதிப்படுத்துகின்றன. ஆபிரிக்க லத்தீன் அமரிக்க நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு இந்த வகையிலான ஆதாரங்களே பெரிதும் பயன்பட்டன.

இளக்கந்தக்குளப் பகுதியில் காணப்படுகின்ற அகலமான செங்கற்களால் கட்டப்ப்ட்ட கட்டிடதொகுதியின் அழிபாடுகள் சமிளங்குடாப் பகுதியில் தென்படும் சான்றுகள், சோலைப் பள்ளத்தில் கிடைக்கக் கூடிய மட்பாண்டங்கள், பெண்டுகள் சேனையில் காணப்படுகின்ற அழிபாடுகள், உலவியா குளமும் அதன் சுற்றாடல்களும், ஆதணோடினைந்த உலாவியன் எனப்படும் மன்ன் பற்றிய செய்திகள், அரியமான் கேணியிலே காணப்படுகின்ற பழைய மக்கள் குடியிருப்புக்கான தடயங்கள் என இப் பிரதேசத்தின் வரலாற்றின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துகின்றன. இங்குள்ள மக்களிடம் வழங்கி வருகின்ற அசோதேயன் என்கிற மன்னன் பற்றிய கதைகளும் இந்த வரலாற்று ஓட்டத்தில் இணைக்கப்பட வேண்டியதே.

சிற்பங்கள் சொல்கின்ற வரலாற்று செய்திகள்

ஒரு பிரதேசத்தின் வரலாற்றில் பழங்கால சிற்பங்களும் ஓவியங்களும் மிக நம்பிக்கைக்குரிய சான்றுகளாக உள்ளன. உலக மனித வரலாறு குகைகளில் புராதன மனிதன் தீட்டிய ஓவியங்களே மனித வரலாற்றை பின்னகர்த்தி சென்றன. அதுபோலவே இப்பிரதேசத்தில் காணப்படும் சிற்பங்கள் நமக்குச்சில வரலாற்றுச்செய்திகளை சொல்கின்றன.

தமிழ் நாட்டினுடைய வரலாற்றில் பல்லவர்கால சிற்பங்கள் புடைப்புச்சிற்பங்களாக செதுக்கப்பட்டன. சம்பூரில் பத்திரகாளி கோயிலில் காணப்படுகின்ற பழைய பத்திரகாளி சிற்பம் புடைப்பு சிற்பமாகவே உள்ளது. மிகவும் நேர்த்தியான வேலைபாடுகளை இச்சிற்பம் கொண்டுள்ளது. இது பல்லவர்காலத்தின் பிற்கூற்றை நினைவு படுத்துகிறது. கி.பி ஏழாம் நூற்றாண்டின் கடைசிக்கால பகுதியைச்சேர்ந்த சிற்பமாக இது இருக்கலாம் போல தெரிகிறது. இந்தச்சிற்பத்தைப்போலவே கட்டைபறிச்சான் அம்மன் நகரில் காணப்படுகின்ற அம்மச்சியம்மன் சிலையும் ஒத்த தன்மையுடையதாக உள்ளது.

பல்லவர்காலத்தில் வாழ்ந்த திருஞான சம்பந்தர் திருக்கோணேஸ்வரத்தை பாடுகின்ற போது

கரைகளு சந்தும் காரகிற்பிளவும்

அளப்பெரும் கனமனி வரன்றி

குரைகலோதம் நித்த்கிலம் கொலிக்கும்

கோணமாமலையமர்ந்தாரே

எனும் வரிகளில் வருகின்ற கரைகளு சந்து, காரகிற் பிளவு ஆகியன கொட்டியாரத்தில் இருந்து கொண்டுசெல்லப்பட்ட விழைபொருட்களாக உள்ளன அடுத்த வரிகளில் வருகிற நித்திலம் என்னும் சொல் முத்தைக்குறித்து நிற்கிறது. மூதூர் கடற்கரையோரப்பகுதிகள் முற்காலத்தில் முத்துக்குளிக்கும் இடங்களாக இருந்தன. அதன் காரணத்தினாலையே முத்தூர் எனப்பெயர் பெற்று பின் மூதூராயிற்று. இது கொட்டியாரத்தினுடைய வரலாற்றின் தொடர்ச்சியை மேலும் உறுதிப்படுத்தி நிற்கிறது.

சோழர்கால சான்றுகள்

சோழராட்சிக்காலத்தில் இப்பிரதேசம் சோழமன்னர்களின் முக்கிய ஆட்சிப்பிரதேசமக இருந்துள்ளது. சோழர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களை பிரமோதயங்கள் என்று அழைத்தனர். கொட்டியாரமும் தனியான பிரமோதயமாகவே கருதப்பட்டுள்ளது பிரமோதயங்கள் வள நாடுகள் என குறிப்பிடப்பட்டு அந்த வள நாடுகளுக்கு பொறுப்பானவர்கள் கானகன் என அழைக்கப்பட்டனர். தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் சுற்று மதிலில் உள்ள கல்வெட்டு ஒன்றில் கொட்டியார கானகன் பற்றிய குறிப்பு காணப்படுகிறது in the royal temple rajaraja and instrument of imperial cola power என்ற கீதா வாசுதேவன் எழுதிய நூலில் 87 ம் பக்கத்தில் கொட்டியாரம் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. கொட்டியாரத்தில் இருந்து தஞ்சைப்பிரகதீஸ்வர் கோயிலுக்கு நெல்லும் தங்கமும் எண்ணையும் வரியாக செலுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

சோழர்கால சான்றுகளில் அவர்களது கல்வெட்டுக்களும் முக்கிய ஆதாரங்களாக உள்ளன மூதூரில் இருந்து செல்கிற போதும் 64ம் கட்டைக்கு பக்கத்தில் உள்ள 3ம் கட்டை மலை என்று சொல்லப்படுகின்ற ராஜவந்தான் மலையில் கிழக்கு அடிவாரத்தில் ஒரு கல்வெட்டு காண[ப்படுகிறது. அக்கல் வெட்டானது மேற்குறிப்பிட்ட மலையில் ஒரு கோயில் இருப்பதாகவும் அந்த கோயிலுக்கு மலையில் இருந்து பார்க்கிற போது கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிகிற வயல் நிலங்கள் கோயிலுக்கு சொந்தமானது என சொல்லப்படுகிறது இக்கல் வெட்டை வாசித்த க,. இந்திரபாலா இதை உறுதிப்படுத்தியுள்ளார் ராஜேந்திர சோழனது காலத்தின் எழுத்து நடை இதில் பயன் படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு ராஜேந்திர சோழன் பெயராலயே இந்தக்கல் வெட்டு உள்ளது.

கங்குவேலி சிவன் கோவிலில் காணப்படுகிற ஒரு கல் வெட்டு சோழர்காலத்தையே குறிப்பிட்டு நிற்கிறது மேலும் அகழ்வாராய்ச்சிகள் செய்யப்படுகிற போது நிறையவே நாம் தகவல்களைப்பெறலாம்.

இதனை விட சம்பூர் பிரதேசத்தில் காப்பட்ட தொட்டில் கல் அதனை ஒத்த அழிபாடுகள், சேனையூர் வீரபத்திரன் கோயிலில் காணப்படுகின்ற பொலன்னறுவை சிவன் கோவில் பாணியிலான அடித்தளமாக அமைந்த கட்டிட இடிபாடுகள், தில்லங்கேணியில் வைத்து வழிபட்ட தற்போது கட்டைபறிச்சான் கும்பத்துமாலின் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் இப்பிராந்தியத்தில் சோழச் செல்வாக்கினை மேலும் உறுதிபடுத்துகிறது மல்லிகைத்தீவிலுள்ள பழைய சிவன் கோவிலுக்கான அடிப்படைகள் சோழச்செல்வாக்குக்கு உட்பட்டதே

திருமங்கலாயும் சோழர்களும்

அகஸ்தியஸ்தாபனம் என்று அழைக்கப்படும் திருமங்கலாய் பிரதேசம் சோழமன்னர்களின் ராசதானியாய் இருந்ததற்கான ஆதாரங்கள் நிறைந்ததாய் உள்ளது.அன்ன்குள்ள கட்டிட அழிபாடுகள் அதனை நிருபிக்கின்றன.இங்குள்ள சிற்பங்கள் சிவலிங்கம் என்பன சோழர் காலத்தவையே என்பது தொல்லியலாளர்கள் நிருபித்துள்ளனர்.பொலநறுவையில் உள்ள சோழர்களின் சிவன்கோயிலை ஒத்த தன்மை இங்கு காணப்படுகிறது.இப்பிரதேசத்தை மையமாகக்கொண்டு எழுந்த திருக்கரசைப்புராணம்.புராண ரீதியாக சிவபெருமானின் திருமணத்தோடு தொடர்புபட்டு அகத்தியர் ஈழ நாட்டுக்குரியவர் என்பதையும்வலியுறுத்துகிறது.அத்தோடு வளமான ஒரு இலக்கிய பாரம்பரியத்தின் தொடர்ச்சியையும் பதிவு செய்துள்ளது.இன்றுவரை தொடர்கின்ற திருக்கரசைப்புராண படிப்பு ஒரு இலக்கியமரபிலான கல்விமுறமையின் தொடர்ச்சியுமாகும்.ஒரு நாகரிகத்தின் தொட்டிலாக விளங்கியமைக்கான சாட்சியே திருக்கரசை புராணமும் அகஸ்திய ஸ்தாபனமுமாகும்.சோழப்பேரரசு செல்வாக்கு செலுத்திய 10ம்,11ம்,12ம், நூற்றாண்டுகளில் இப்பிரதேசம் மிகுந்த செல்வாக்கு செலுத்திய இடமாக இருந்துள்ளது.திருமங்கலாயும் அகஸ்தியஸ்தாபனமும் கொட்டியாரத்தின் வரலாற்று மூலங்களின் முக்கிய தடங்கள்.சோழப்பேரரசுக்கும் இப்பிரதேசத்துக்குமான தொடர்புகள் கடல் வழியாக இலந்தத்துறையூடாக நேரடியாகவே இருந்துள்ளன பொலநறுவைக்கான தொடர்புகளையும் இங்கிருந்தே மேற்கொண்டிருக்கலாம் போல தெரிகிறது.ஏனெனில் மகாவலி கங்கையின் அடுத்த கரை பொலநருவையின் எல்லைக்குட்பட்டது.இன்றய சோமாவதிக்கூடாக இத்தொடர்புகள் இருந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன.

கோணேசர் கல்வெட்டு தரும் தகவல்கள்.

கொட்டியாரப்பிரதேசத்தின் வரலாற்றை மேலும் தெளிவு படுத்தி விளங்கிக் கொள்ள கோணேசர் கல்வெட்டு பெரிதும் உதவுகிறது.குளகோட்டு மன்னன் திருகோணமலை பகுதி முழுவதையும் தன் ஆட்சிக்கு உட்படுத்தியிருந்த வேளையில், இப்பிராந்தியத்தை நான்கு பெரும் பிரிவுகளாக பிரித்து ஆட்சி செய்தான் நன்கு பிரிவுகளுக்கும் நான்கு வன்னிபங்களை நியமித்திருந்தான்.

1.திருக்கோணமலை வன்னிபம்

2.கட்டுக்குளப்பற்று வன்னிபம்

3.தம்பலகாமப்பற்று வன்னிபம்

4.கொட்டியாரப்பற்று வன்னிபம்

வன்னிபம் என்பது சிற்றரசுகளையே குறிக்கிறது.இலன்க்கை வரலாற்றில் பல வன்னிபங்கள் பற்றிய குறிப்புக்கள் உள்ளன.

சோழர்காலத்திலிருந்து இந்த வன்னிப முறைகளுக்கான சான்றுகள் காணப்படுகின்றன.பன்னிரண்டாம் நூற்றண்டிலிருந்து ஆங்கிலேயர்கள் காலம் வரை கொட்டியாரத்தில் வன்னிபங்கள் அதிகாரத்திலிருந்துள்ளனர்.

கோணேசர் கல்வெட்டு தருகின்ற மற்றொரு செய்தி திருவாசகப்புலவன் பற்றியது”காஞ்சிபுரத்துக் கோயிலொன்றை சேர்ந்த ஒதுவார் குடிகளில் ஒன்றினை வரவழைத்தமை.அக்குடியிலுள்ள ஒருவனை திருக்கோணேஸ்வரத்திலே திருப்பதிகம் பாட நியமித்தமை,அவனுக்கு திருவாசகப்புலவனென்று பெயர் சாத்தியமை.பரவணி ஆட்சியாக பள்ளவெளியில் இண்டவண நிலமும் சம்பூரும் மானியமாக வழங்கி செப்பேடு கொடுத்தமை”புலவன் வ்ரவு எனும் தலைப்பில் காணப்படுகின்றன.

கோணேசர் கல்வெட்டின் விரிவாக எழுந்த திருக்கோணாசல புராணமும் கொட்டியாரம் பற்றிய வரலாற்று செய்திகளை தருகிறது.

கோணேசர் கல்வெட்டில் உள்ள பின்வரும் பாடல்கள் கொட்டியாரம் பற்றிய முக்கியமான செய்திகளைத்தருகின்றன.

பாடல்16

தானதிக திருமலைக்கு நாற்காத வழி திருத்தித் தானும் கோண

மான பரற்கென அளித்தேன் கொட்டியாரப் பகுதியோர் மகிழ்த்தே

செய்தல்

ஆன துவர்க்காயினுடன் வெள்ளிலையும் அருங்கதலிக் கனியும்

சாந்தும்

ஊனமறு பால் தயிர் நெய் அரிசி ஒரு நூறு அவணம் உகந்தே ஈதல்

கொட்டியாரப்பற்றில் நான்கு காத வழி தூரத்திற்கு உற்பத்தி விளை நிலங்களை உண்டாக்கி கோணேசப்பெருமானுக்கென கொடுத்தேன் அந்தக்கொட்டியாரப்பற்றில் வாழ்பவர்கள் மகிழ்ந்து செய்ய வேண்டியது யாதெனில் கோணெசர் கோயிலுக்கு பாக்கும், வெற்றிலையும்,வாழைப்பழமும் ,சந்தணமும்,குற்றமற்ற பால்,தயிர் நெய்யும் நூறு அவண அரிசியும் கொடுத்துவரவேண்டும்

17ம்பாடல் ஈதலுடன் ஏரண்டம் இருப்பை புன்னைப்பருப்பு இவைகள் இறையாத்தீவில்

சேமமுற ஒப்புவிக்கச் செக்காட்டி எண்ணையுற திருந்த ஆட்டி

ஓதரிய கெளளிமுனை மீகாமனிடத்தில் வரவு வந்தே கோண

தீதமுற குருகுல நற் கணக்கில் உள்ளபடி நிறைவாய் ஊற்றல்

இலுப்பை புன்னைப்பருப்புக்களை இறையாத்தீவில் உள்ளவர்களிடம் ஒப்படைக்கவேண்டும் அவைகளை அவர்கள் செக்கிட்டு ஆட்டி ,எண்ணெய் வகைகளை தனித்தனியே ,எடுத்துச்சென்று சொல்லுதற்கரிய கெளளிமுனையிலுள்ள மிகாமனிடத்தில் கொடுக்க வேண்டும்.அதை அவர்கள் ஏற்றிவந்து கோணெசர் கருவூலத்தில் தங்கள் கணக்கில் வரவு வைக்க வேண்டும்

இப்பாடல்கள் மூலம் கொட்டியாரத்தின் வளமும் அதன் வரலாற்றுத் தொடர்புகளும் மேலும் உறுதிப்படுகின்றன.

கொட்டியாரப்பற்றில் 16ம் 17ம் நூற்றண்டுகளில் அதிகாரத்திலிருந்த வன்னிபங்கள் பற்றிய சான்றுகளை பெறமுடிகிறது.வெருகல் சித்திர வேலாயுதர் கோயிலில் உள்ள சாசன்மொன்று கயிலாயவன்னியன் பற்றிய செய்தியை தருகிறது. இச் சாசன் வரிவடிவம் பதினாறாம் நூறாண்டுக்குரியதாய் உள்ளது.சாசனம் பின்வருமாறு அமையும்

“சிறி சுப்ரமண்ய நம தெற்கு மதில் கயிலாய வன்னியனார் உபயம்

(ம)திமராசா மகன் “என செல்கிறது இக் கல்வெட்டு.கயிலாய வன்னியன் இப்பிரதேச வன்னிபமாக விளங்கியிருக்கின்றமை சான்றாக அமைகிறது.

“பதினேழாம் நூற்றாண்டில் அய்ரோப்பியர்களால் எழுதப்பட்ட நூல்களோடு வெளியிடப்பட்ட தேசப்படங்களில் கொட்டியாரம்பற்று ஒரு இராச்சியமாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.இலங்கையிலுள்ள இராச்சியங்களின் சிற்றரசுகளின் பட்டியலில் கொட்டியாரமும் ஒரு இராச்சியமாகவே கருதப்பட்டுள்ளது.

கண்டி அரசோடு கொட்டியாரம் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தமைக்கு கண்டிய அரசு வரலாற்றுச் செய்திகள் ஆதாரமாக அமைகின்றன. ஜயவீரபண்டாரனுக்கும்,விமலதர்மனுக்கும் அரசுரிமைப்போட்டி ஏற்பட்ட போது ஜயவீரனுக்கு ஆதரவாக கொட்டியார வன்னிபம் 7980 போர் வீரர்களையும் 600 கூலியாட்களையும்,1000 பொதிமாடுகளையும்,30 போர் யானைகளையும் 25 அலியன் யானைகளையும் அனுப்பி வைத்தான் என்று சொல்லப்படுகிறது.

கி.பி.1611ம் ஆண்டு போர்த்துக்கேயருக்கெதிராக சிற்றரசுகளின் கூட்டமொன்றை கூட்டிய போது அக்கூட்டத்தில் கொட்டியாரப்பற்றின் வன்னிபமான இடலி கலந்துகொண்டதாகக் குறிப்புகள் உள்ளன.

கி.பி.1613ம் கண்டிராஜனின் இளவரசனை அழைத்து வரும் பொறுப்பு கொட்டியாரம் வன்னிபத்திடம் வழங்கப்பட்டிருந்தமைக்கான சான்றுகளும் காணப்படுகின்றன.

இரண்டாம் இராஜசிங்கன் கண்டி மன்னனாக ஆட்சி செய்த காலத்தில் இளஞ்சிங்கன் என்பவன் கொட்டியாரம் வன்னிபமாக விளங்கியுள்ளமையை அறிய முடிகிறது.

திருகோணமலை பற்றிய ஒல்லாந்தத் தளபதியின் குறிப்பில் கொட்டியாரப் பற்றில் நிலவிய அரசு பற்றிய செய்திகள் உள்ளன.

கண்டி அரசனால் சிறைப்பிடிக்கப்பட்ட றொபட் நொக்சின் குறிப்புக்களும் கொட்டியாரப்பற்றில் நிலவிய அரசுபற்றிய குறிப்புக்களைக்கொண்டுள்ளது.

“வெருகல் சித்திரவேலாயுதர் காதல்” நூல் தரும் வரலாற்றுப் பதிவுகள்:-

தம்பலகாமம் வீரக்கோன் முத்லியார் எழுதிய இந்த நூல் வெருகல் கோயில் அரங்கெற்றம் செய்யப்பட்டமையை பின்வருமாறு கூறுகிறது.

“துன்னுமிரு மரபுந் துய்யவிளஞ் சிங்கமெனும்

வன்னிமை பொற்பாதம் வணங்கயினி சொல்லாதை

வன்னிமை தேசத்தார் மகாநாடு தான் கூட்டி

மின்னுமெழில் மண்டபத்தில் வீற்றிருக்கும் வேளையில்

கோதில் புகழ் சேர் வீரக்கோன் முதலிதானியற்றுங்

காதவரங்கேற்றுகையிற் காதறனைச் சொல்லாதை”

இதில் வருகின்ற தேசத்தார் மகாநாடு என்ற சொற்றொடர் மிக முக்கியமான வரலாற்றுச்செய்தியாக உள்ளது.கொட்டியாரம் ஒரு தேசமாகக் கருதப்ப்ட்டமைக்கான சான்று இங்குள்ளது.தேசத்தின் என்னும் போது,கொட்டியாரம் ஏழு ஊர்களாகப் பிரிக்கப்பட்டு ஏழு அடப்பன் மார்கள் நியமிக்கப்பட்டு பரிபாலனம் செய்யப்பட்டமைகான சான்றுகளை நாம் கங்குவேலி கல்வெட்டில் காணமுடியும்.

சேனையூரில் அடப்பன் முறை அண்மைக்காலம் வரை நடைமுறையில் இருந்தமையை இதன் தொடர்ச்சியாகக் கொள்ளலாம்.வெருகல் சித்திர வேலாயுத கோயிலின் வருடாந்தர திருவிழாவில் 15ம் திருவிழா சேனையூர், கட்டைப்பறிச்சானுக்குரியது.இத்திருவிழாவை 1980ம் ஆண்டு பொது நிர்வாகத்தவர் பொறுப்பெடுக்கும் வரை சேனையூரின் கடைசி அடப்பனாக இருந்தவருடைய மகன் வீரக்குட்டி அவர்களே பொறுப்பாக இருந்தார் என்பது என்பது அடப்பன் முறையின் முக்கிய குறிப்பாகும்.

பிரித்தானியருடைய பரிபாலனத்தின் கீழிருந்த பொழுது உள்ளூர் முறைமைகளை அவர்கள் பின்பற்றியிருந்தனர் அடப்பன் உடையார் என தம் ஆட்சிக்கு துணையாக அவர்களை வைத்திருந்தமையும் இங்கு கவனிக்கத்தக்கது.

1970 களில் புதிய நிர்வாக முறை அறிமுகப்படுத்தும் வரை,கொட்டியாரப்பற்று காரியாதிகாரி எனும் அரச நிர்வாக முறைமையே இருந்தது.

அரசியல் ரீதியாக பாராளுமன்ற தேர்தல்கள் நடைமுறையில் மூதூர் இரட்டை அங்கத்தவர் தொகுதியாக இருந்த பொழுது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும்,தமிழரசுக் கட்சியில் முஸ்லிம் பாரளுமன்ற உறுப்பினர்களும் மாறி மாறி தெரிவாகினர்.

1970மாண்டிலேயே முதன் முதலாக கொட்டியாரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக முடிந்தது.கிளிவெட்டியின் தவப்புதல்வனும்,கொட்டியாரத்தின் அரசியல் தலைவனாகவும் வெளிப்பட்ட திருவாளர் அ. தங்கத்துரை பரளுமன்ற அங்கத்தவராகத் தெரிவு செய்யப்பட்டார்.இவர் காலத்தில் மூதூரில் பல அபிவிருத்தி வேலைகள் நடப்பெற்றன.இன்று வரை மக்கள் மனதில் அவர் பெயர் நிலைத்திருக்கிறது.பயங்கரவாதம் அவரைப் பலி கொண்டாலும் பசுமையான அவர் நினைவு கொட்டியார மக்களின் மனதில் மாறாதது. தங்கத்துரை அண்ணன் என்ற அவர் நாமம் அழிக்க முடியாத ஒன்று.

அரசியல் ரீதியாக தமிழர் கூட்டணியின் உபதலைவராக மூதூரின் திருவாளர் அருளப்பு ஐயா அவர்கள் இருந்தமையும் பின்நாட்களில் அவருடைய மகன் அந்தோனி டொக்டர் தமிழர் கூட்டணியின் செயற்குழுவில் முக்கிய உறுப்பினராகச் செயற்பட்டமையும் கொட்டியாரப்பற்றின் அரசியல் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தி நிற்கின்றன.

1977ல் ஏற்பட்ட புதிய தேர்தல் தொகுதி முறைமை கொட்டியாரத்தின் தமிழர் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழித்தது.

பின்நாளில் அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் மூலம் 1988ல் கொட்டியாரம் தனக்கான பாராளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்திருந்தது,ஆனால் அப்போதய அரசியல் சூழலால் வேறு ஒருவருக்கு அப்பதவி போனது.

1994ல் நடைபெற்ற தேர்தலில் திருவளர் அ. தங்கத்துரை திருகோணமலை மாவட்டத்தைப் பிரதிநிதிப்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினரானார்.

1987ல் அமைக்கப்பட்ட மாகாணசபையில் கொட்டியாரப் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினராக மூதுரைச்சேர்ந்த போல் ராஜ் தெரிவு செய்யப்பட்டார்.அண்மையில் உருவாக்கப்பட்ட கிழக்குமாகாண சபையில் ஈச்சிலம்பற்றை சேர்ந்த சைவப்புலவர் அ.பரசுராமன் மாகாணசபை உறுப்பினராகவுள்ளர்.

1981ல் மாவட்ட அபிவிருத்திசபை அமைக்கப்பட்ட போது திருவாளர் தங்கத்துரை அவர்கள் அதன் தலைவராக தெரிவு செய்யப்பட்டு இப்பிரதேசத்திற்கு பெருமை சேர்த்தார்.

2001ம் ஆண்டில் கொட்டியாரத்தைச் சேர்ந்த சேனையூர் மகாவித்தியாலய முன்னாள் அதிபர் க.துரைரெட்டினசிங்கம் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்புக் கிடைத்தது.பின்பு 2004ம் ஆண்டு தேர்தலிலும் அவர் கொட்டியாரத்தின் சார்பாக தெரிவு செய்யப்பட்டமை இப்பிரதேசத்தின் அரசியல் ஸ்திரத்தன்மையை வெளிப்படுத்துகிறது.

அரசியல் ரீதியாக பார்க்கிற போது முன்னய கிராமசபை முறமை பல பிரதேச தலைமைகளை உருவாக்கியது.தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்திய பல கிராமசபைகள் சிறப்பாக செயல்பட்டன. பழைய கிராமசபை தலைவர்களை நினைவு கூருவது பொருத்தம் என நினைக்கிறேன். கிளிவெட்டி திரு.வினாயகமூர்த்தி, மல்லிகைத்தீவு திரு.சுப்ரமணியம், சம்பூர்,திரு.சரவணை,திரு.சிவராசா,திரு.தாமோதரம், கட்டைபறிச்சான், திரு.கணபதிப்பிள்ளை(சேனையூர்)திரு.சிவபாக்கியம்(சேனையூர்),திரு.சு.குணநாயகம்(கட்டைபறிச்சான்),திரு.செ.இராசரெத்தினம்(மருதநகர்),திரு.சுந்தரமூர்த்தி.(கட்டைபறிச்சான்)ஈச்சலம்பற்று திரு.இ.ஞானகணேஸ்

எண்பதுகளில் புதிய உள்ளூராட்சி நடை முறை கொண்டுவரப்பபட்ட போது மூதூர் பிரதேச சபையின் முதல் தலைவராக கட்டைபறிச்சான் கிராமோதயசபைத் தலைவர் திரு.கோ.இரத்தினசிங்கம் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த இடத்தில் இந்த பிரதேசத்தின் கல்வி வரலாறு பற்றி பேசுவது பொருத்தம் என நினைக்கிறேன்.மூதூர் புனித அந்தோனியார் வித்தியாலயமே இப்பிரதேசத்தின் தாய் பாடசாலை என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள்.இப்பிரதேச மூத்த கல்வியாளர்கள் இங்கிருந்தே உருவானார்கள்.திருவாளர் சிப்பிரியான் பெர்னாண்டோ அவர்கள் பல கல்வியாளர்கள் உருவாக வழி சமைத்தவர்களில் முதன்மையானவர். மற்றும்திரு அருளப்பு றோச் டி வாஸ் இவரே இன்றய மூதூர் மகா வித்தியாலயத்தை உருவாக்கியவர். திரு நடராசா, திரு அரசரெத்தினம், திரு.செ.கதிர்காமத்தம்ம்பி, திருமதி லில்லி இராசரெத்தினம், திரு வ.அ.இராசரெத்தினம், திரு.டி.ஜி.சோமசுந்தரம், திருமதி.மங்களம் சோமசுந்தரம். திரு.ஞானமுத்து, பண்டிதர் நிக்கிலஸ், பண்டிதர் சவரிமுத்து குரூஸ், திரு.கனகசபை,திரு.செல்லபாக்கியம் பாய்வா,திரு.இமானுவேல் குரூஸ்(செல்லையா),திரு.அன்ரனி நிக்கிலஸ்,திரு.ஒப்பிலாமணி பாய்வா,திரு.இராசேந்திரம்(ஈச்சலம்பற்று),திரு.சின்னத்தம்பி,திரு.லியோ றோச் டி வாஸ்,திரு.சுவாம்பிள்ளை,திரு.பெஞ்சமின் பாய்வா,திரு.செல்லத்துரை கொரய்ரா,திரு.கோபலபிள்ளை,திரு.கணபதிப்பிளை,திரு.கதிரவேற்பிள்ளை. திரு.கு.அம்பலவாணர்.திரு.கிருஸ்ணபிள்ளை,திருமதி.சின்னப்பிள்ளை கிருஸ்ணபிள்ளை,திரு.ஸ்ரனிஸ்லாஸ் இவர்கள் கொட்டியாரத்தின் மூத்த தலைமுறை கல்வி முன்னோடிகள். இந்நூலின் விரிவஞ்சி அடுத்த தலை முறை கல்வி முன்னோடிகள் பற்றிய தகவல்கள் இங்கு இடம் பெறவில்லை

கொட்டியாரப் பிரதேசத்தில் கல்விக்கான பாடசாலைகளை உருவாக்கியவர்கள் கத்தோலிக்க மிசனிமாரும்,மெதடிஸ்த மிசனிமாரும் முதன்மை பெறுகின்றனர்.கிராமப்புறங்களில் அதிகமான பாடசாலைகளை உருவாக்கியவர்கள் மெதடிஸ்த மிசனிமாரே.1956 அரசு பாடசாலைகளை பொறுப்பேற்றபின்பு பல புதிய பாடசாலக்கள் உருவாகின.

கொட்டியாரத்தின் வரலாறு தனியொரு நூலாக வருகிற பொழுது மேலும் விரிவான விளக்கங்களைப்பெற முடியும்.இது ஒரு அறிமுகக் குறிப்பாகவே உங்கள் முன் வருகிறது.

இவ்வரலாற்றுக் குறிப்புக்களில் முஸ்லிம்கள் பற்றிய குறிப்புக்கள் இடம்பெறவில்லை அது தனியாக பார்க்கப்படவேண்டிய விடயம்.இங்கு நான் குறிப்பிடும் தகவல் என் அறிவுக்கு எட்டிய வரையில் தொகுக்கப்பட்டுள்ளன.இதற்கு மேலதிகமான தகவல்கள் தெரிந்தோர் தெரிவிக்கின்ற போது அடுத்த பதிப்பில் அவைகள் இணைத்துக்கொள்ளப்படும்.

பாலசுகுமார்,

மேனாள் பீடாதிபதி,

கலை கலாசார பீடம்

கிழக்குப் பல்கலைக்கழகம்

Monday, 6 December 2010

Sunday, 7 November 2010

சேனையூர்

தாய் நிலத்தின் நினைவுகள்

சேனையூர்
தௌ;ளுதமிழ்ச் சொல்
உச்சரிக்கும் போதே
உவகை உச்சிவரை மூட்டும்
முன்னோர்கள்
எம் முன்னோர்க்கும்
முன்னோர்கள் வாழ்ந்து வந்த
எங்கள் வளம் கொளிக்கும் கிராமம்

ஏழைகட்கு வாழ்வளிக்கும்
மீன் வளத்தை தான் சுமந்து
உப்பு நீர் கடலிருந்து உட்புகுந்து
வளைந்து நெளிந்து
முப்புறமும் சூழ்ந்து
எப்பொழுதும் அரணாக
இயற்கை தந்த கொடை

பழந்தமிழ் மணம் வீச
பண்பாடு காத்து பண்போடு
கலாசாரப் பெருமை காத்து
முத்தமிழ் கலை வளர்த்து
புத்தெழுச்சியோடு உத்வேகம்கொண்ட
உயிர்த் துடிப்புள்ள கிராமம்

காடும் மேடும் திருத்தி
களனிகளாய்ச் செப்பனிட்டு
வாழ்வளித்த உழவர் நாழும்
வலம் வந்த மண்

இன்று நார்நாராய் கிழிபட்டு
வேரோடு சாய்ந்த மரமாய்
மரணப்படுக்கையில் மண் மகள்
ஓடி வருகிறோம் வாரியணைக்கிறோம்
கண்ணீரை இறைத்துக் களைத்து
எம் சென்னீரை வியர்வையாக்கி
சிறுகச் சிறுக மெருகூட்டுகிறோம்

Saturday, 6 November 2010

சம்பூர் பத்திரகாளி ஆயிரம் வருசங்கள் பழமையானது


காளிதேவியின் கனவுக் கூடாரம்
கலைந்த படியே கிடக்கிறது
வீணைநரம்புகள் விம்மியபடியே
நெற்றிப் புருவங்கள் சுழிக்கின்றன
பால் நிலவு அங்கு எறிப்பதில்லை
காலடி விளக்குகள் ஒளிர்வதில்லை
சதங்கையின் சங்கீதம் பிறப்பதில்லை
குந்தியிருந்த படியே
காற்றிலே கரைந்து போகிறேன்

வாழ்விடம் முழுவதும் வலிய இருள்
நெஞ்சங்கள் நிறைந்த கீறல்கள்
கட்டிக் கொண்ட புண்களாய்
இதயங்கள் கொதிப்படையும்
தாமரைக் குளக்காற்றோ
சுட்டெரிக்கும் சூரியனாய்;
மண்ணில் பட்டு மரத்துப்போகும்
கால் நடைகளின் கண்களில்
காய்ந்து போன கண்ணீர்த்துளிகள்
சொந்தங்களைத் தேடியதனால்
சோர்ந்து போன நடைப்பவனி
இரைந்து கொண்டிருந்த கடல்
மௌனம்காத்து அடங்கிப் போகிறது
மீண்டும் ஒரு சுனாமிக்காய்

Wednesday, 20 October 2010

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும். 3

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
3
கட்டைபறிச்சான் நல்ல அழகான கிராமம். கொட்டியாரக்குடாக் கடல் நிலத்தைக் குடைந்து சிற்றாறைத் தூதனுப்பி நிலம்பிடிக்க முயற்சித்தா? உப்புநீர் சிற்றாறு ஊரைச் சுற்றி ஓடுகிறது. வெண்கண்ணா மரங்களின் மூச்சுவேர் வெளிக்கிளம்பிக் குத்தீட்டிகளாக நிமிர்ந்து நிற்கும். கண்டல் கண்ணாவின் நீண்ட காய்கள் நீரிலாடி நீந்தி வரும். காய்கள் ஆற்றோரத்தில் அடைந்து அங்கேயே முளைவிட்டு நிமிர்ந்து நிற்கும். உச்சிக் கிளையில் மீன்கொத்திப் பறவைகள் காவலிருக்கும். கொக்குநிரை உப்புநீர் சிற்றாற்றின் கரையோரம் தவமிருக்கும். சிறு தோணிகள் உலாப்போகும். நீரின்மேல் மிதக்கும் மிதவைகளைப் பிடித்து இழுப்பார்கள். மீன் நண்டு வலையோடு வரும். இறால் மலிவாகக் கிடைக்கும். தோட்டம் நிறைந்து பயிர்கள் சிரிக்கும் இராசவள்ளிக் கிழங்கு நிலத்தடியில் அடைகாக்கும்.
வாழை, கமுகு மரக்கறிவகைகள் விளைந்து நிற்கும். சிறுகுளங்களில் இருந்து தண்ணீர் வாய்க்கால் வழி பாய்ந்து வயல்விளைந்து கிடக்கும். செல்வச்செழிப்போடு திளைத்த கிராமம். வந்தார்க்கெல்லாம் அள்ளிக் கொடுக்கும் மக்கள், இன்று யாரும் கிள்ளிக் கொடுத்தால் பெற்றுக் கொள்ளும் அளவுக்கு அகதிகளாக்கப் பட்டுவிட்டார்கள். கயல்விழியின் மனக்கண்முன் கட்டைபறிச்சான் கிராமம் படமாக விரிந்து ஓடியது.
இறால் பாலத்துக்கப்பால் இருக்கும் அம்மன்கோயிலில் வருசத்துக்கு ஒருமுறை வேள்வி நடக்கும். மடைபோட்டுச் சாமியாடி, பொங்கல் பொங்கி மக்கள் எல்லோரும் சேர்ந்து மகிழ்வார்கள். இளைஞர்களிடையே மந்திரப் போட்டிகள் நடக்கும். சிவம் சாமியாடி ஆசிரியர்களுக்கு வாழைப்பழங்களைச் சீப்போடு தூக்கி வந்து “ ம்..இந்தா” என்று கொடுப்பார். பாடசாலைப் பிள்ளைகளுக்குக் கொண்டாட்டம். இறால் பாலத்தில் தட்டையான கற்களைத் தண்ணீரில் சாய்வாக எறிந்தால் அது தெத்தித் தத்தித் தூரத்துக்குப் போகும். அதை ரசிப்பது வேடிக்கையாய் இருக்கும். அநற்றை நினைந்து மகிழ்ந்தாள். எல்லாம் பகற்கனவாய்ப் போய்விட்டது.
அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் சுந்தரத்தார் எழுந்து விட்டார். அவருக்கு அது பழக்கப்பட்டதுதான். தங்கம் வீடு வாசலைப் பெருக்கித் தேநீர் தயாரித்து விட்டார். கயல்விழி அதிகாலையிலேயே விழித்து விட்டாள். ஆனால் அவள் படுக்கையிலேயே இருந்தாள். அவளது எண்ணமெல்லாம் எதிர்காலம் பற்றியதாக இருந்தது. கிராமத்து மக்கள் அதிகாலையிலேயே எழுந்து விடுவார்கள். சுறுசுறுப்பாக வேலைசெய்வார்கள். உடல் உறுதியாக இருக்கும். மனம் தூய்மையாக இருக்கும். வன்செயல்களினால் அவர்கள் தளர்ந்து நொடிந்து விட்டார்கள். அவளது அசைவை தங்கம் உணர்ந்து கொண்டார். “கயல் தேநீர் தரட்டா பிள்ள”. கேட்டவாறே ஒரு கோப்பைத் தேநீரைக் கொடுத்தார். எழுந்து அவளும் புறப்படத் தயாரானாள். பல்கலைக்கழகத்தில் இருந்து வந்து பலநாட்களாகிவிட்டன. திருமங்கையிடம் இருந்து செய்தியொன்றும் வரவில்லை.
சமதரையில் கிராமத்தில் காலாற நடந்து திரிந்தவளுக்குப் புறாக்கூட்டு வாழ்க்கை வெறுத்தது. படிக்கும் வரைக்கும் தோழிகளோடு அரைட்டையடித்து மகிழ்ந்தவளுக்கு வாழ்க்கை ‘போர்’ அடித்தது. பகலில் நூல்நிலையம் செல்வாள். பத்திரிகைகளைப் புரட்டி வேலைவாய்ப்பு விளம்பரப் பகுதிகளில் கண்களைச் செலுத்துவாள். தெரிந்த முகங்களைத் தேடுவாள். குறிப்பாக அந்தப் பழகிய முகத்தைத் தேடுவாள். தேடும் பொருள் கண்களில் படாது. கவலையோடு திரும்புவாள்.
வீட்டில் அம்மாவுக்கு உதவிகள் செய்வாள். உணவின்பின் வீட்டில் அடைந்து கிடப்பாள். புத்தகங்கள்தான் அவளுக்கு தோழிகள். நல்ல நூல்களைத் தேடி வாசித்தாள். நல்ல புத்தகங்கள் சிறந்த நண்பர்கள் என்பதை உணர்ந்து கொண்டாள். வாழ்க்கையின் சுழிவு நெளிவுகளை படிப்படியாக அறிந்து கொண்டு வந்தாள். காற்று வசதியற்ற நகரத்து வாழ்க்கை அவளுக்கு அலுப்பைக் கொடுத்தது. தனது பொழுது வீணே கழிவதை உணர்ந்தாள். ஊருக்குப்போனால் பயனுள்ள வழிகளில், உற்சாகமாகப் பொழுதைக் கழிக்கலாம். ஒருமுடிவுக்கு வந்தாள்.
“அப்பா நானும் ஊருக்கு வரப்போறன். எனக்கு ஊரைப்பார்க்க ஆசையாய்க் கிடக்கு. நான் வந்தால் உதவியாகவும் இருக்கும்”. கயல்விழி ஆசையோடு கேட்டுக்கொண்டாள். மகளின் சொல்லைத் தட்டவும் மனமில்லை. “இஞ்சாருங்க. நானும் வாறன். எல்லாருமாய்ப் போய் வருவம். வீடுவாசலைப் பார்த்து துப்பரவு செய்தால் நிம்மதியாக போய்க் கிடக்கலாம்.” தங்கம் சொல்லிக் கொண்டே காலைச் சாப்பட்டைத் தயாரித்தார். “எதுக்கும் கொஞ்சம் உண்டனச் சமையுங்க. பகலுக்கும் உதவும்.” சுந்தரர் முன்னெச்சரிக்கையாகச் சமிக்ஞை கொடுத்தார். தாய்க்குக் கயல்விழி உதவினாள். “நீ அங்கால போ பிள்ள. நான் ஒரு நொடியில செய்துபோடுவன். நீ வெளிக்கிடு”. கூறிக்கொண்டு தனது வேலையில் ஈடுபட்டார். சுந்தரத்தார் வேண்டிய பொருட்களை எடுத்துக் கொண்டார். “தங்கம்! சிலநேரம் வேலைகள் முடியாட்டி ஒரு நாளைக்கு நிற்கவேண்டி வரலாம். நான் நின்று வேலைய முடித்துத்தான் வருவன். நீங்க திரும்பிட வேணும்.” சுந்தரத்தார் சொல்லிக் கொண்டு ஆயத்தமானார்.
ஆட்டோவில் ஜெட்டிக்குப் புறப்பட்டார்கள். செல்லச்சாமி ஜெட்டியில் காத்திருந்தார். பெரிய கியு நின்றது. “இன்டைக்குச் சந்தோசமாயிருக்கு. கயல்விழியும் ஊருக்கு வாறதால லோஞ் இல்லை. கப்பல்சேவைதான் இருக்காம். அது எட்டு மணிக்குப் புறப்படுமாம்”. செல்லச்சாமி உற்சாகத்தோடு விளக்கினான். சுந்தரத்தாருக்கு உள்ளுறச் சந்தோசம். கப்பலில் போவது பயமில்லை. பாதாளமலைப் பகுதி சுழியுள்ள இடம். காற்றும் வீசும். பயங்கர அலையும் மோதும். லோஞ் நடுக்கடலில் அலைகளில் மோதுண்டு ஆட்டும். மகள் பயந்து விடுவாள். பயம் அவரை உறுத்தியது. பெற்ற மனம் பித்து என்பார்கள். மனித மனத்தின் இயல்புகள் அப்படித்தானே. அடையாள அட்டையைக் கொடுத்துப் பதிந்தார்கள். பணத்தைக் கொடுத்து ரிக்கட் எடுத்தார்கள். ஏறுவதற்கு வசதியாகக் கப்பல் ஜெட்டி ஓரத்தில் தரித்து நின்றது. அப்படியே கப்பலின் உள்ளே ஏறிப் பார்த்தார்கள். சுமார் இருநூறு பயணிகள் பயணிக்கலாம். கயல்விழிக்குக் கப்பல் பயணம் புதியது. லோஞ்சில் பயணம் செய்திருக்கிறாள். ஓவ்வொரு முறையும் பயணம் செய்யும் போதும் உயிர் போய் திரும்பி வரும் உணர்வைப் பெறுவாள். எனினும் பயணம் செய்யத்தானே வேண்டும். இன்று சற்று வித்தியாசமாக இருந்தது. கப்பலில் யன்னல் ஓரமாக இருக்கையில் இருந்தாள். அம்மா அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டார். யன்னலின் ஊடாகத் திருகோணமலையின் இயற்கைத் துறைமுகத்தைப் பார்த்த வண்ணம் இருந்தாள். பயணிகள் கப்பலில் ஏறிக்கொண்டனர். அப்பா முன்னால் இருக்கையில் இருந்தார். எட்டரை மணிக்குக் கப்பல் புறப்பட்டது. பிரச்சினைகள் தொடங்குவதற்கு முன் துறைமுகத்தின் வழியே பயணங்கள் மேற்கொள்ளப் பட்டன. அது குறுகிய தூரம். ஆனால் பிரச்சினை தொடங்கியதும் அவ்வழி மூடப்பட்டுவிட்டது. தலையைச் சுற்றி மூக்கைப் பிடிப்பது போல் இப்போது பிறிமா ஜெட்டிவரை சென்று மலைத்தொடரைச் சுற்றித் திரும்ப வேண்டும்.
கப்பல் நிறையப் பயணிகள் இருந்தனர். பலர் பெரும்பான்மை இனத்தவர்கள். நம்நாட்டுப் பிரசைகள். அவர்களுக்கு ‘ரூறிஸ்ற்’; அந்தஸ்த்துக் கொடுத்து ஒரு மாயையைத் தோற்றுவித்திருந்தனர். அவர்களும் வெளிநாட்டு மக்களைப் போல் தமது கலாசாரத்தை மறந்து சுற்றுலாப் பயணிகளாக கப்பலில் பயணம் செய்தனர். விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து நாட்டைமீட்டு விட்டோம். பயங்கரவாதம் முடிந்து விட்டது. நாட்டைக் கைப்பற்றி விட்டோம். என்ற அரச அறிவிப்புப் பரவியது. அதனைத் தொடர்ந்து ‘ இலங்கையின் வடக்குக் கிழக்கு’ வேறொரு பிரதேசமாக விளக்கம் கொடுபட்டுள்ளது. வேறொரு நாட்டினைக் கைப்பற்றி வெற்றிகொண்டதாக ஒரு எண்ணம் பெரும்பான்மை மக்களிடம் இருந்தது. இப்போது திருகோணமலை உள்நாட்டுப் பெரும்பான்மை இன மக்களுக்குச் ‘சுற்றுலா மையமாக’ ஆகிவிட்டது. தினம் தினம் ஆயிரக்கணக்கான மக்கள் கப்பலில் பயணிக்கிறார்கள். கப்பல் ஆட்டம் இல்லாது சென்றது. பாதாளமலையடியில் அலைகள் ஆர்ப்பரித்து எழுந்தன. கப்பலும் மெதுவாக அசைந்தது. தொட்டிலில் இட்ட பிள்ளைகளாக பயணிகளும் அசைந்தனர். அலைகள் கப்பலில் மோதின. மோதிய வேகத்தில் அலை உடைந்து நீர்த்திவலைகள் மேலெழுந்து தூறலாய்ப் பரந்தது. நீலக்கடலில் பால்போல் நுரை பரவிச்சிரித்தது. கயல்விழி பார்த்து ரசித்தாள். பாளைச் சிரிப்பு உதிர்ந்தது. அவளது அதீத கற்பனை சிறகடிக்கத் தொடங்கியது. அவளது மனம் கட்டைபறிச்சானை நோக்கிப் பறந்தது.
சுந்தரத்தாரின் வீடு அழகானது. அவரது காணியின் கிழக்கெல்லையாக உப்பு நீர்ச்சிற்றாறு ஓடுகிறது. ஆறுதான் கிழக்கெல்லையின் வேலி. தென்னைகள் வரிசையாகக் காட்சி தரும். மா, பலா, வாழையென எங்கும் கனிதரு மரங்கள். ‘தெங்கும் இளநீரும், தேமதுர முந்திரியும்’ என யாழ்நூலில் முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகள் குறிப்பிடுவது போல, இரண்டு ஏக்கர் காணியில் அவரது இராச்சியம் அரசோச்சியது. சுற்றிவரத் தோட்டப்பயிர்கள் காய்த்துப் பூத்துக் கலகலக்கும். காணியில் ஆழமான கிணறு இருந்தது. நிலத்தடி நீர் பயிர்களுக்குச் செழிப்புட்டியது. வீட்டைச் சுற்றிப் பூந்தோட்டம். வண்ண வண்ண ரோஜாச் செடிகளை கயல்விழி வளர்த்திருந்தாள். குரோட்டன் செடிகளைத் திட்டமிட்டுக் கச்சிதமாக நட்டிருந்தாள். பூஞ்செடிகள் பூத்திருக்கும். இடையிடையே கத்தரி, மிளகாய் கண்சிமிட்டும். கலப்புப் பயிர்ச்செய்கையில் நாட்டம் அவளுக்கு. மரவள்ளிச் செடிகள் ஒரே மட்டமாக அழகாக வளர்ந்திருக்கும். இராசவள்ளிக் கொடிகள் சிறு தடிகளைச் சுற்றிப் பின்னிப் படர்ந்திருக்கும். வீட்டுத்தோட்டம் மேலதிக வருவாயைக் கொடுத்தது.
கட்டைபறிச்சான் நாகதம்பிரான் கோயில் பெருமைவாய்ந்தது. உற்சவ காலங்களில் திருகோணமலை மாவட்டக் கிராமங்களில் இருந்து மக்கள் வருவார்கள். நேர்த்தி வைத்தவர்கள் பயபக்தியோடு விரதமிருந்து பொங்கலிடுவார்கள். இனசனங்கள் தங்கள் உறவுகளோடு சேர்ந்து கொள்ளும் நிகழ்வாக விளங்கியது. இரவு முழுவதும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். வீரசிங்கம் குழுவினரின் வில்லுப்பாட்டு ஊரைக்கலக்கி எடுக்கும். அன்னலக்சுமி, சந்தானலெக்சுமி குழுவினரின் இசைமழை உள்ளங்களைக் கவர்ந்தெடுக்கும். அந்தக்குழுவில் அம்பிகாவோடு கயல்விழியும் சேர்ந்து பாடுவாள். பல்லிசை விற்பன்னர் விபுணசேகரத்தின் பல்லிய வாத்தியக் கருவிகளின் இன்னிசை காற்றில் பரவும்.
‘கத்தும் கடலும் கவிபாடித் தாலாட்டும்முத்தம் எங்கள் மூதூர் பிரதேசத்தின் கட்டைபறிச்சானில்காலிடறும் பக்கமெல்லாம்இசைபரந்து களிப்பூட்டும்.இளந்தென்றல் பரவிவரும்கட்டை பறிச்சானைத் தழுவிவரும் பூங்காற்றுப்பட்டாலே போதும் பாட்டு வந்து கூத்தாடும்காலாற வீதிகளில் கதைத்து நடந்தாலே கொண்ட மனக்கவலைகுலைந்தோடிப் போய்விடுமாம்’
எனக் ‘கேணிப்பித்தன் கவிவரி’களைக் கட்டைபறிச்சான் கனகசிங்கம் பாடி அசத்துவார்.
அந்தக் கவிதை வரிகளை அசைபோட்டுப் பார்த்தாள். என்ன அற்புதமான காலம். எல்லாம் கனவாகிப் போய்விட்டன. கிராமத்தின் வாழ்க்கை முறை ‘கல்லெறிபட்ட தேன் கூடாகக்’ கலைந்து போயிற்று. அவளது எண்ணத்தறி கப்பலின் அசைவால் சிதறியது. “அம்மா! இந்த இடத்தில்தான் லோஞ் புரண்டது. கனபேர் செத்தவங்கள்.” கயல்விழி நினைவு கூர்ந்தாள். தங்கத்துக்குப் பயம். “அதையேன் நினைக்கிறாய். அந்தக் கோணேசரை நினைத்துக் கொள். ஓன்றும் வராது”. அவளுக்கு உள்ளுரப் பயம். ஆனால் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாது மகளின் சிந்தனையை வேறு பக்கம் திசைதிருப்ப முனைந்தாள்

கும்பம் 2010



கும்பம் 2010





கும்பம் 2010









சம்பூர் மக்களின் அவலம்

E-mail Print PDF

திருமலை மாவட்டத்திலுள்ள சம்பூர் பகுதியிலிருந்து ஐந்து வருடங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட மக்கள் தம்மை மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியேறுவதற்கு அனுமதிக்குமாறு கேட்டுள்ளார்கள். தற்போது முகாம்களில் சொல்லெணாத் துயரங்களை தாம் அனுபவித்துவருவதாகவும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறுவதன் மூலமாக மட்டுமே தமது எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள முடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்கள்.


போர் ஆரம்பமான பின்னர் சம்பூர் பகுதியிலுள்ள மக்கள் உடுத்த உடைகளுடன் 2006ல் வெளியேறினற். பின்னர் இப்பகுதியில் அனல் மின் நிலையம் ஒன்றை இந்தியாவின் உதவியுடன் அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ள அரசாங்கம் அந்தப் பகுதியை அதி உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. இதனால் நான்குக்கும் அதிகமான கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த ஐந்து வருட காலமாக முகாம்களிலேயே வசிக்கின்றார்கள்.

சம்பூர் பிரதேச இடம்பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கப் பிரதிநிதிகள் குழுவினர் கிளிவெட்டி, பட்டித்திடல், மணற்சேனை மற்றும் கட்டைபறிச்சான் பகுதிகளிலள்ள நலன்புரி முகாம்களில் அடிப்படை வசதிகளின்றி துன்புற்று இடம்பெயர்ந்த நிலையில் வாழும் சம்புபூர் கிழக்கு, சம்பூர் மேற்கு, நவரெத்தினபுரம், கூனித்தீவு மற்றும் கடற்கரைச்சேனை ஆகிய கிராம சேவகர்கள் பிரிவிற்குட்பட்ட மக்களை சந்தித்து அவர்களுடைய நிலைமைகளையிட்டு ஆராய்ந்துள்ளது. தங்களது உறவுகளுடன் சுக, துக்கங்களை கேட்டறிந்த சங்க பிரதிநிதிகளிடம் இம்மக்கள் தாங்கள் தற்போது எதிர்நோக்கும் பல பிரச்சினைகளைப் பட்டியலிட்டனர்.

அவற்றுள் முக்கியமானவையாக தொழில் வாய்ப்பின்மை, பிள்ளைகள் கல்வி கற்பதற்கான ஒழுங்கான கட்டுமானங்கள் மற்றும் தேவையான உபகரணங்கள் இல்லாமை, குடிநீர்த் தட்டுப்பாடு, குளிப்பதற்கான நீர் தட்டுப்பாடு, பொருட்கள் விலையேற்றத்திற்கமைவாக வருமானம் இல்லாமை, உலக உணவுத் திட்ட உலர் உணவுப் பொருட்கள் அனைத்து உணவுத் தேவைகளையும் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லாதிருக்கின்றமை, மற்றும் கட்டைபறிச்சான் நலன்புரி நிலையத்தில் பொது மின் விளக்குகள் இல்லாத காரணத்தினால் இரவில் பாதுகாப்பு இன்மை போன்றவை முக்கியமானவையாகக் காணப்படுகின்றன.

அத்துடன் கடந்த யுத்தத்தில் தாங்கள் முதன்முதலாக இடம்பெயர்ந்த போதிலும் தேர்தல்களின் பின்னர் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட தமது நிலையினை அறிவதற்கு தம்மை வந்து பார்வையிடவில்லை எனவும் இம்மக்கள் தெரிவித்ததாக அறிய முடிகின்றது.

இடம்பெயர்ந்த மக்களை பார்வையிட இந்தியாவில் இருந்து வருகை தந்த இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், வடக்கில் மெனிக்பாம் முகாமில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்களை சந்தித்தபோதும் நீண்டகாலமாக கிழக்கின் திருக்கோணமலை மாவட்டத்தின் கிளிவெட்டி, பட்டித்திடல், மணற்சேனை, கட்டைபறிச்சான் ஆகிய நலன்புரி முகாம்களில் கடந்த ஐந்து வருடங்களாக இடம்பெயர்ந்து வாழும் எங்களை பார்வையிடாமல் கோணேசர் பெருமானை வழிபட்டுவிட்டும், ஏனைய அரச அதிகாரிகளை சந்தித்துவிட்டு சென்றுள்ளமை தமக்கு ஏமாற்றமளித்திருப்பதாகத் தெரிவித்தனர்.

அத்துடன் இதுவரை காலமும் வழங்கப்பட்டுவரும் உலக உணவுத் திட்டத்தின் உலர் உணவு நிவாரணமும் எதிர்வரும் மார்கழி மாதத்துடன் நிறுத்தப்படும் என உரிய அதிகாரிகளால் உரிய நலன்புரி நிலையங்களில் வாழும் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த அறிவிப்பு தம்மை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தம்மை தமது சொந்த சொந்த பிரதேசமான சம்பூரில் மீளக் குடியேற்றப்படாமல் தொடர்ந்தும் முகாம்களுக்குள்ளெயே வைத்திருப்பதால் எதுவிதமான தொழில் வாய்ப்புக்களுமின்றி வாழ்வாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்கியிருக்கும் தமக்கு இந்நிவாரணம் தொடர்ந்து கிடைப்பதற்கு உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அம்மக்கள் தாம் காலம்காலமாக வழிபட்டு வந்த சம்பூர் பத்திரகாளி அம்மாவையும், கூனித்தீவு வட பத்திரகாளி அம்மாவையும், சம்பூர் அரசடி விநாயகரையும், சம்பூர் நாகதம்பிராணையும், சம்பூர் விநாயகரையும், கடற்கரைச்சேனை சம்புக்களி பத்தினி அம்மனையும் சென்று வழிபடுவதற்கு உரிய ஆவன செய்யப்பட வேணடும் எனவும் தமக்குச் சொந்தமான சம்புக்குள வயல்வெளி, வீரக்குட்டியார் வயல்வெளி, செம்மணையான் குளம் வயல்வெளி, மொட்டையாண்டிக் குள வயல்வெளி, பெரியாரப்பற்றை வயல்வெளி, ஆலங்குளம் வயல்வெளி, கொக்கட்டி வயல்வெளி, தொடுவான்குள வயல்வெளி, பெரிய நையந்தை வயல்வெளி, சின்ன நையந்தை வயல்வெளி, மற்றும் கட்டக்காடு வயல்வெளி முதலிய வயல் பிரதேசங்களில் நெற் செய்கையை தாங்கள் முழுமையாக மேற்கொள்வதற்கு வழிசெய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கின்றார்கள்

Thursday, 7 October 2010

கஞ்சா ரொட்டியும் காடேறி பிசாசுகளும்

எங்கள் கிராமத்து
சின்னச் சாமிகளுக்கு
வருடமொரு முறை நாமெலாம் கூட
நடக்கும் கூடார மடை

சாட்டையை நீட்டிப் பிடித்து
பூசாரிகள் மந்திரம் சொல்ல
அகோர முகத்தோடு உருவேறி ஆடும்
சின்னச் சாமிகள.

கஞ்சா ரொட்டியும்
சாராயப் போத்தலும்
கறுத்தச் சேவலும்
பலிமடையில் கிடக்க

காடேறியும் கரையாக்கனும்
ஊத்தை குடியனும் கபாள வைரவனும்
சுற்றி நிற்கும் பரிவாரங்களும்
படையலுக்குப் போட்டியிட்டு
உருNறி ஆடும்

பிசாசுகளெல்லாம்
கஞ்சா ரொட்டிக்குப் பின்னால் அலைந்து
பிய்த்துக்கிழித்து சப்பி விழுங்கும்
கறுத்தச் சேவலை தலையால் கடித்து
இரத்தம் உறிஞ்சும்
காலம் மாறி…….

இன்று
நாங்கள் பலிமடையில் கிடக்க
பிசாசுகள்
வேப்பிலை எறிந்து இரும்புகள் ஏந்தி
கள்ளப் பூசாரிகளின்
மந்திரம் கேட்டு
எம்மை ஓட ஓட விரட்டி
சொத்தழித்து உயிர் குடிக்க
நரபலிக்காய்
எப்போதும் காத்திருக்கிறது
கூடார மடை

இன்று
கஞ்சா ரொட்டியாய்
நாங்கள்……..
காடேறிப் பிசாசுகளாய்
அவர்கள்……!

குஞ்சு பறிகொடுத்த தாய்ப் பறவை

ஏழையாய்ச் சபிக்கப்பட்ட
என் வயிற்றில் பிறந்து
மலையாய் வளர்ந்தவனே…….!
எட்டுத்திக்கும் தேடிவிட்னே உன்னை….
எங்கே இருக்கிறாய்
என் அழு குரலும் எட்டாத
தூரத்துள்..!

நேற்றிரவும்
என் கனவில் நீதான்
நீயின்றிக் கனவில் இப்போது
வேறு பொருள் தெரிவதில்லை
உன்னுருவம் கனவில் தெரிகின்ற
இரவெல்லாம் ஊரே கூடிவிடும்
என் ஒப்பாரி ஒலி கேட்டு……….

அம்மா நான்
பட்டினியால் துடித்தாலும்
விறகு விற்றும் கூலிஜ வுலை செய்தும்
உன் உடலை வளர்த்த கதை
நான் அறிவேன் நீயறிவாய்
பாதகர்கள் அறிவாரோ…..?

உயிர் காக்க வந்த நம்மை
ஏன் பிரித்தான் கடவுள்…..
என் தொங்கல் சேலையில்
பற்றிப்பிடித்திருந்த உன்னை
பறித்தெடுத்துப் போனாரே
யமன் உருவில் பாதகர்கள்……..
கடசியாய் நீ கடித்த சோளங் கதிர் கூட
இப்போதும் என்னிடத்தில் உளுத்துப்போய்………!

என்ன சொல்லி அழுதிருப்பாய்
அடிவாங்கும் போது…..
அம்மாவை அழைத்திருப்பாய்
பதறுதடா மனது…….
உன்னினைவில் அழுதழுது
உயிரின்றி உலாவுகின்றேன்.
நான் உன்னை
தேடாத இடமில்லை
கேக்காத ஆழில்லை
சாத்திரிகள் சொன்னார்கள்
நீ உயிரோடிருப்பதாய்…!
என் கருவில் வந்தவனே
அழுகுரலும் கேட்காதா உன் காதில்…..
சத்தியமாய்ச் சொல்கிறேன் மகனே..!
இன்னும் நானுனக்கு
சாக்கிரியை செய்யவில்லை……!

அறியப்படாத போதும் அறியப்பட்ட போதும்

எல்லாம் நிறைந்து
பூரணமாகிய
சம்பூர் மண்ணை
வேறுலகம் அறியாது
நாங்கள் மட்டும்
அறிந்த போது
அங்கிருந்தோம் நாம்….

சம்பூரே செய்தியாகி
ஊலகத்திசையெல்லாம்
ஓலித்த போது….
என் இனிய தாய் நிலமே
நாங்கள் உன்னோடில்லை
இன்று தனித்திருக்கிறாய் நீ…
உன் பிள்ளைகளின்
சுவடுகளை மட்டும் சுமந்தபடி……

களவாடப் பட்ட விடுமுறை நாட்கள்

விடுமுறை நெருங்க
மனதில் நீளும் நிகழ்ச்சிப்பட்டியல்
ஆடைகள் அடுக்கபட்டு
முன் பதிவு செய்து பொண்டது போல்
தயாராகும் பயணப்பொதி

உறவுகள் எல்லோருக்கும் பொருட்கள்
ஏற்கனவேஇலக்கமிடப்படடிருக்க……….
ஊடம்பெல்லாம் சிறகுமுளைத்து
இறுதிப்பரீட்சையை எதிர்பார்த்து
தவம் கிடக்கும் விழிகள்.

கூட்டத்துடன் பேரூந்தில் அமர்ந்தாலும்
வீடு போய்ச்சேரும் வரை
வீதியை அளந்து கொண்டே வரும் எதிர்பார்ப்பு
என் வவுக்காய் காத்துக்கிடக்கும்
தாய்நிலம்.

வீட்டின் படலை திறக்க
அம்மாவை முந்தி வந்து
தோளில் பாயும் நாய்க்;குட்டி
பயணக்களைப்பே காணாமல் போகும்
காளிகோயிலும் வயல் வெளியும்
சொந்தங்களின் வீடும்
சொல்லாமலே பருகிவிடும் நாட்களை

என் வரவை அறிந்ததும்
நிழல்வாகைச் சந்தியில் குந்தி
ஊர் வம்பளக்க
நக்கலடித்து உரக்கச் சிரிக்க
ஊர்க்கதைகளை சுமந்தபடி
சூழ்ந்து கொள்ளும் நண்பர் கூட்டம்
வீடு களைகட்டிக்கிடக்கும்

வேலன்ர பெட்டை கூட்டிட்டு ஓடியது
பக்கத்து வீட்டுக் காதல் கல்யாணம்
ஏல்லா விபரமும் காதில் எட்டும்……
குளத்து வெட்டையில் பாட்டியும் நடக்கும்
மறுநாள் சிரித்து வயிறு வெடிக்கும்
இப்படி……
முப்பது நாள் விடுமுறை ஊரில்
நிமிடம் போல் கரையும் வாழ்க்கை வசிகரம்தான்

நீண்ட நாட்களின் பின்
நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது
என் மனம் செத்துக்கிடந்தது
முன்பு போல எல்N;லாரும் தயாராகினர்
விடுமுறை கழிக்க……
என் பயணப்பொதி மட்டும்
விறைத்துக்கிடந்தது வெறுமையாய்
வலிகளின் வடிவான
அகதிக்கூடாரத்தினுள் விடுமுறை
எப்படி வசிகரமாய்த் தோன்றும் என்ற ஏக்கத்தோடு……