Wednesday, 20 October 2010

சம்பூர் மக்களின் அவலம்

E-mail Print PDF

திருமலை மாவட்டத்திலுள்ள சம்பூர் பகுதியிலிருந்து ஐந்து வருடங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட மக்கள் தம்மை மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியேறுவதற்கு அனுமதிக்குமாறு கேட்டுள்ளார்கள். தற்போது முகாம்களில் சொல்லெணாத் துயரங்களை தாம் அனுபவித்துவருவதாகவும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறுவதன் மூலமாக மட்டுமே தமது எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள முடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்கள்.


போர் ஆரம்பமான பின்னர் சம்பூர் பகுதியிலுள்ள மக்கள் உடுத்த உடைகளுடன் 2006ல் வெளியேறினற். பின்னர் இப்பகுதியில் அனல் மின் நிலையம் ஒன்றை இந்தியாவின் உதவியுடன் அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ள அரசாங்கம் அந்தப் பகுதியை அதி உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. இதனால் நான்குக்கும் அதிகமான கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த ஐந்து வருட காலமாக முகாம்களிலேயே வசிக்கின்றார்கள்.

சம்பூர் பிரதேச இடம்பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கப் பிரதிநிதிகள் குழுவினர் கிளிவெட்டி, பட்டித்திடல், மணற்சேனை மற்றும் கட்டைபறிச்சான் பகுதிகளிலள்ள நலன்புரி முகாம்களில் அடிப்படை வசதிகளின்றி துன்புற்று இடம்பெயர்ந்த நிலையில் வாழும் சம்புபூர் கிழக்கு, சம்பூர் மேற்கு, நவரெத்தினபுரம், கூனித்தீவு மற்றும் கடற்கரைச்சேனை ஆகிய கிராம சேவகர்கள் பிரிவிற்குட்பட்ட மக்களை சந்தித்து அவர்களுடைய நிலைமைகளையிட்டு ஆராய்ந்துள்ளது. தங்களது உறவுகளுடன் சுக, துக்கங்களை கேட்டறிந்த சங்க பிரதிநிதிகளிடம் இம்மக்கள் தாங்கள் தற்போது எதிர்நோக்கும் பல பிரச்சினைகளைப் பட்டியலிட்டனர்.

அவற்றுள் முக்கியமானவையாக தொழில் வாய்ப்பின்மை, பிள்ளைகள் கல்வி கற்பதற்கான ஒழுங்கான கட்டுமானங்கள் மற்றும் தேவையான உபகரணங்கள் இல்லாமை, குடிநீர்த் தட்டுப்பாடு, குளிப்பதற்கான நீர் தட்டுப்பாடு, பொருட்கள் விலையேற்றத்திற்கமைவாக வருமானம் இல்லாமை, உலக உணவுத் திட்ட உலர் உணவுப் பொருட்கள் அனைத்து உணவுத் தேவைகளையும் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லாதிருக்கின்றமை, மற்றும் கட்டைபறிச்சான் நலன்புரி நிலையத்தில் பொது மின் விளக்குகள் இல்லாத காரணத்தினால் இரவில் பாதுகாப்பு இன்மை போன்றவை முக்கியமானவையாகக் காணப்படுகின்றன.

அத்துடன் கடந்த யுத்தத்தில் தாங்கள் முதன்முதலாக இடம்பெயர்ந்த போதிலும் தேர்தல்களின் பின்னர் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட தமது நிலையினை அறிவதற்கு தம்மை வந்து பார்வையிடவில்லை எனவும் இம்மக்கள் தெரிவித்ததாக அறிய முடிகின்றது.

இடம்பெயர்ந்த மக்களை பார்வையிட இந்தியாவில் இருந்து வருகை தந்த இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், வடக்கில் மெனிக்பாம் முகாமில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்களை சந்தித்தபோதும் நீண்டகாலமாக கிழக்கின் திருக்கோணமலை மாவட்டத்தின் கிளிவெட்டி, பட்டித்திடல், மணற்சேனை, கட்டைபறிச்சான் ஆகிய நலன்புரி முகாம்களில் கடந்த ஐந்து வருடங்களாக இடம்பெயர்ந்து வாழும் எங்களை பார்வையிடாமல் கோணேசர் பெருமானை வழிபட்டுவிட்டும், ஏனைய அரச அதிகாரிகளை சந்தித்துவிட்டு சென்றுள்ளமை தமக்கு ஏமாற்றமளித்திருப்பதாகத் தெரிவித்தனர்.

அத்துடன் இதுவரை காலமும் வழங்கப்பட்டுவரும் உலக உணவுத் திட்டத்தின் உலர் உணவு நிவாரணமும் எதிர்வரும் மார்கழி மாதத்துடன் நிறுத்தப்படும் என உரிய அதிகாரிகளால் உரிய நலன்புரி நிலையங்களில் வாழும் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த அறிவிப்பு தம்மை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தம்மை தமது சொந்த சொந்த பிரதேசமான சம்பூரில் மீளக் குடியேற்றப்படாமல் தொடர்ந்தும் முகாம்களுக்குள்ளெயே வைத்திருப்பதால் எதுவிதமான தொழில் வாய்ப்புக்களுமின்றி வாழ்வாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்கியிருக்கும் தமக்கு இந்நிவாரணம் தொடர்ந்து கிடைப்பதற்கு உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அம்மக்கள் தாம் காலம்காலமாக வழிபட்டு வந்த சம்பூர் பத்திரகாளி அம்மாவையும், கூனித்தீவு வட பத்திரகாளி அம்மாவையும், சம்பூர் அரசடி விநாயகரையும், சம்பூர் நாகதம்பிராணையும், சம்பூர் விநாயகரையும், கடற்கரைச்சேனை சம்புக்களி பத்தினி அம்மனையும் சென்று வழிபடுவதற்கு உரிய ஆவன செய்யப்பட வேணடும் எனவும் தமக்குச் சொந்தமான சம்புக்குள வயல்வெளி, வீரக்குட்டியார் வயல்வெளி, செம்மணையான் குளம் வயல்வெளி, மொட்டையாண்டிக் குள வயல்வெளி, பெரியாரப்பற்றை வயல்வெளி, ஆலங்குளம் வயல்வெளி, கொக்கட்டி வயல்வெளி, தொடுவான்குள வயல்வெளி, பெரிய நையந்தை வயல்வெளி, சின்ன நையந்தை வயல்வெளி, மற்றும் கட்டக்காடு வயல்வெளி முதலிய வயல் பிரதேசங்களில் நெற் செய்கையை தாங்கள் முழுமையாக மேற்கொள்வதற்கு வழிசெய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கின்றார்கள்

No comments:

Post a Comment