Wednesday, 20 October 2010

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும். 3

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
3
கட்டைபறிச்சான் நல்ல அழகான கிராமம். கொட்டியாரக்குடாக் கடல் நிலத்தைக் குடைந்து சிற்றாறைத் தூதனுப்பி நிலம்பிடிக்க முயற்சித்தா? உப்புநீர் சிற்றாறு ஊரைச் சுற்றி ஓடுகிறது. வெண்கண்ணா மரங்களின் மூச்சுவேர் வெளிக்கிளம்பிக் குத்தீட்டிகளாக நிமிர்ந்து நிற்கும். கண்டல் கண்ணாவின் நீண்ட காய்கள் நீரிலாடி நீந்தி வரும். காய்கள் ஆற்றோரத்தில் அடைந்து அங்கேயே முளைவிட்டு நிமிர்ந்து நிற்கும். உச்சிக் கிளையில் மீன்கொத்திப் பறவைகள் காவலிருக்கும். கொக்குநிரை உப்புநீர் சிற்றாற்றின் கரையோரம் தவமிருக்கும். சிறு தோணிகள் உலாப்போகும். நீரின்மேல் மிதக்கும் மிதவைகளைப் பிடித்து இழுப்பார்கள். மீன் நண்டு வலையோடு வரும். இறால் மலிவாகக் கிடைக்கும். தோட்டம் நிறைந்து பயிர்கள் சிரிக்கும் இராசவள்ளிக் கிழங்கு நிலத்தடியில் அடைகாக்கும்.
வாழை, கமுகு மரக்கறிவகைகள் விளைந்து நிற்கும். சிறுகுளங்களில் இருந்து தண்ணீர் வாய்க்கால் வழி பாய்ந்து வயல்விளைந்து கிடக்கும். செல்வச்செழிப்போடு திளைத்த கிராமம். வந்தார்க்கெல்லாம் அள்ளிக் கொடுக்கும் மக்கள், இன்று யாரும் கிள்ளிக் கொடுத்தால் பெற்றுக் கொள்ளும் அளவுக்கு அகதிகளாக்கப் பட்டுவிட்டார்கள். கயல்விழியின் மனக்கண்முன் கட்டைபறிச்சான் கிராமம் படமாக விரிந்து ஓடியது.
இறால் பாலத்துக்கப்பால் இருக்கும் அம்மன்கோயிலில் வருசத்துக்கு ஒருமுறை வேள்வி நடக்கும். மடைபோட்டுச் சாமியாடி, பொங்கல் பொங்கி மக்கள் எல்லோரும் சேர்ந்து மகிழ்வார்கள். இளைஞர்களிடையே மந்திரப் போட்டிகள் நடக்கும். சிவம் சாமியாடி ஆசிரியர்களுக்கு வாழைப்பழங்களைச் சீப்போடு தூக்கி வந்து “ ம்..இந்தா” என்று கொடுப்பார். பாடசாலைப் பிள்ளைகளுக்குக் கொண்டாட்டம். இறால் பாலத்தில் தட்டையான கற்களைத் தண்ணீரில் சாய்வாக எறிந்தால் அது தெத்தித் தத்தித் தூரத்துக்குப் போகும். அதை ரசிப்பது வேடிக்கையாய் இருக்கும். அநற்றை நினைந்து மகிழ்ந்தாள். எல்லாம் பகற்கனவாய்ப் போய்விட்டது.
அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் சுந்தரத்தார் எழுந்து விட்டார். அவருக்கு அது பழக்கப்பட்டதுதான். தங்கம் வீடு வாசலைப் பெருக்கித் தேநீர் தயாரித்து விட்டார். கயல்விழி அதிகாலையிலேயே விழித்து விட்டாள். ஆனால் அவள் படுக்கையிலேயே இருந்தாள். அவளது எண்ணமெல்லாம் எதிர்காலம் பற்றியதாக இருந்தது. கிராமத்து மக்கள் அதிகாலையிலேயே எழுந்து விடுவார்கள். சுறுசுறுப்பாக வேலைசெய்வார்கள். உடல் உறுதியாக இருக்கும். மனம் தூய்மையாக இருக்கும். வன்செயல்களினால் அவர்கள் தளர்ந்து நொடிந்து விட்டார்கள். அவளது அசைவை தங்கம் உணர்ந்து கொண்டார். “கயல் தேநீர் தரட்டா பிள்ள”. கேட்டவாறே ஒரு கோப்பைத் தேநீரைக் கொடுத்தார். எழுந்து அவளும் புறப்படத் தயாரானாள். பல்கலைக்கழகத்தில் இருந்து வந்து பலநாட்களாகிவிட்டன. திருமங்கையிடம் இருந்து செய்தியொன்றும் வரவில்லை.
சமதரையில் கிராமத்தில் காலாற நடந்து திரிந்தவளுக்குப் புறாக்கூட்டு வாழ்க்கை வெறுத்தது. படிக்கும் வரைக்கும் தோழிகளோடு அரைட்டையடித்து மகிழ்ந்தவளுக்கு வாழ்க்கை ‘போர்’ அடித்தது. பகலில் நூல்நிலையம் செல்வாள். பத்திரிகைகளைப் புரட்டி வேலைவாய்ப்பு விளம்பரப் பகுதிகளில் கண்களைச் செலுத்துவாள். தெரிந்த முகங்களைத் தேடுவாள். குறிப்பாக அந்தப் பழகிய முகத்தைத் தேடுவாள். தேடும் பொருள் கண்களில் படாது. கவலையோடு திரும்புவாள்.
வீட்டில் அம்மாவுக்கு உதவிகள் செய்வாள். உணவின்பின் வீட்டில் அடைந்து கிடப்பாள். புத்தகங்கள்தான் அவளுக்கு தோழிகள். நல்ல நூல்களைத் தேடி வாசித்தாள். நல்ல புத்தகங்கள் சிறந்த நண்பர்கள் என்பதை உணர்ந்து கொண்டாள். வாழ்க்கையின் சுழிவு நெளிவுகளை படிப்படியாக அறிந்து கொண்டு வந்தாள். காற்று வசதியற்ற நகரத்து வாழ்க்கை அவளுக்கு அலுப்பைக் கொடுத்தது. தனது பொழுது வீணே கழிவதை உணர்ந்தாள். ஊருக்குப்போனால் பயனுள்ள வழிகளில், உற்சாகமாகப் பொழுதைக் கழிக்கலாம். ஒருமுடிவுக்கு வந்தாள்.
“அப்பா நானும் ஊருக்கு வரப்போறன். எனக்கு ஊரைப்பார்க்க ஆசையாய்க் கிடக்கு. நான் வந்தால் உதவியாகவும் இருக்கும்”. கயல்விழி ஆசையோடு கேட்டுக்கொண்டாள். மகளின் சொல்லைத் தட்டவும் மனமில்லை. “இஞ்சாருங்க. நானும் வாறன். எல்லாருமாய்ப் போய் வருவம். வீடுவாசலைப் பார்த்து துப்பரவு செய்தால் நிம்மதியாக போய்க் கிடக்கலாம்.” தங்கம் சொல்லிக் கொண்டே காலைச் சாப்பட்டைத் தயாரித்தார். “எதுக்கும் கொஞ்சம் உண்டனச் சமையுங்க. பகலுக்கும் உதவும்.” சுந்தரர் முன்னெச்சரிக்கையாகச் சமிக்ஞை கொடுத்தார். தாய்க்குக் கயல்விழி உதவினாள். “நீ அங்கால போ பிள்ள. நான் ஒரு நொடியில செய்துபோடுவன். நீ வெளிக்கிடு”. கூறிக்கொண்டு தனது வேலையில் ஈடுபட்டார். சுந்தரத்தார் வேண்டிய பொருட்களை எடுத்துக் கொண்டார். “தங்கம்! சிலநேரம் வேலைகள் முடியாட்டி ஒரு நாளைக்கு நிற்கவேண்டி வரலாம். நான் நின்று வேலைய முடித்துத்தான் வருவன். நீங்க திரும்பிட வேணும்.” சுந்தரத்தார் சொல்லிக் கொண்டு ஆயத்தமானார்.
ஆட்டோவில் ஜெட்டிக்குப் புறப்பட்டார்கள். செல்லச்சாமி ஜெட்டியில் காத்திருந்தார். பெரிய கியு நின்றது. “இன்டைக்குச் சந்தோசமாயிருக்கு. கயல்விழியும் ஊருக்கு வாறதால லோஞ் இல்லை. கப்பல்சேவைதான் இருக்காம். அது எட்டு மணிக்குப் புறப்படுமாம்”. செல்லச்சாமி உற்சாகத்தோடு விளக்கினான். சுந்தரத்தாருக்கு உள்ளுறச் சந்தோசம். கப்பலில் போவது பயமில்லை. பாதாளமலைப் பகுதி சுழியுள்ள இடம். காற்றும் வீசும். பயங்கர அலையும் மோதும். லோஞ் நடுக்கடலில் அலைகளில் மோதுண்டு ஆட்டும். மகள் பயந்து விடுவாள். பயம் அவரை உறுத்தியது. பெற்ற மனம் பித்து என்பார்கள். மனித மனத்தின் இயல்புகள் அப்படித்தானே. அடையாள அட்டையைக் கொடுத்துப் பதிந்தார்கள். பணத்தைக் கொடுத்து ரிக்கட் எடுத்தார்கள். ஏறுவதற்கு வசதியாகக் கப்பல் ஜெட்டி ஓரத்தில் தரித்து நின்றது. அப்படியே கப்பலின் உள்ளே ஏறிப் பார்த்தார்கள். சுமார் இருநூறு பயணிகள் பயணிக்கலாம். கயல்விழிக்குக் கப்பல் பயணம் புதியது. லோஞ்சில் பயணம் செய்திருக்கிறாள். ஓவ்வொரு முறையும் பயணம் செய்யும் போதும் உயிர் போய் திரும்பி வரும் உணர்வைப் பெறுவாள். எனினும் பயணம் செய்யத்தானே வேண்டும். இன்று சற்று வித்தியாசமாக இருந்தது. கப்பலில் யன்னல் ஓரமாக இருக்கையில் இருந்தாள். அம்மா அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டார். யன்னலின் ஊடாகத் திருகோணமலையின் இயற்கைத் துறைமுகத்தைப் பார்த்த வண்ணம் இருந்தாள். பயணிகள் கப்பலில் ஏறிக்கொண்டனர். அப்பா முன்னால் இருக்கையில் இருந்தார். எட்டரை மணிக்குக் கப்பல் புறப்பட்டது. பிரச்சினைகள் தொடங்குவதற்கு முன் துறைமுகத்தின் வழியே பயணங்கள் மேற்கொள்ளப் பட்டன. அது குறுகிய தூரம். ஆனால் பிரச்சினை தொடங்கியதும் அவ்வழி மூடப்பட்டுவிட்டது. தலையைச் சுற்றி மூக்கைப் பிடிப்பது போல் இப்போது பிறிமா ஜெட்டிவரை சென்று மலைத்தொடரைச் சுற்றித் திரும்ப வேண்டும்.
கப்பல் நிறையப் பயணிகள் இருந்தனர். பலர் பெரும்பான்மை இனத்தவர்கள். நம்நாட்டுப் பிரசைகள். அவர்களுக்கு ‘ரூறிஸ்ற்’; அந்தஸ்த்துக் கொடுத்து ஒரு மாயையைத் தோற்றுவித்திருந்தனர். அவர்களும் வெளிநாட்டு மக்களைப் போல் தமது கலாசாரத்தை மறந்து சுற்றுலாப் பயணிகளாக கப்பலில் பயணம் செய்தனர். விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து நாட்டைமீட்டு விட்டோம். பயங்கரவாதம் முடிந்து விட்டது. நாட்டைக் கைப்பற்றி விட்டோம். என்ற அரச அறிவிப்புப் பரவியது. அதனைத் தொடர்ந்து ‘ இலங்கையின் வடக்குக் கிழக்கு’ வேறொரு பிரதேசமாக விளக்கம் கொடுபட்டுள்ளது. வேறொரு நாட்டினைக் கைப்பற்றி வெற்றிகொண்டதாக ஒரு எண்ணம் பெரும்பான்மை மக்களிடம் இருந்தது. இப்போது திருகோணமலை உள்நாட்டுப் பெரும்பான்மை இன மக்களுக்குச் ‘சுற்றுலா மையமாக’ ஆகிவிட்டது. தினம் தினம் ஆயிரக்கணக்கான மக்கள் கப்பலில் பயணிக்கிறார்கள். கப்பல் ஆட்டம் இல்லாது சென்றது. பாதாளமலையடியில் அலைகள் ஆர்ப்பரித்து எழுந்தன. கப்பலும் மெதுவாக அசைந்தது. தொட்டிலில் இட்ட பிள்ளைகளாக பயணிகளும் அசைந்தனர். அலைகள் கப்பலில் மோதின. மோதிய வேகத்தில் அலை உடைந்து நீர்த்திவலைகள் மேலெழுந்து தூறலாய்ப் பரந்தது. நீலக்கடலில் பால்போல் நுரை பரவிச்சிரித்தது. கயல்விழி பார்த்து ரசித்தாள். பாளைச் சிரிப்பு உதிர்ந்தது. அவளது அதீத கற்பனை சிறகடிக்கத் தொடங்கியது. அவளது மனம் கட்டைபறிச்சானை நோக்கிப் பறந்தது.
சுந்தரத்தாரின் வீடு அழகானது. அவரது காணியின் கிழக்கெல்லையாக உப்பு நீர்ச்சிற்றாறு ஓடுகிறது. ஆறுதான் கிழக்கெல்லையின் வேலி. தென்னைகள் வரிசையாகக் காட்சி தரும். மா, பலா, வாழையென எங்கும் கனிதரு மரங்கள். ‘தெங்கும் இளநீரும், தேமதுர முந்திரியும்’ என யாழ்நூலில் முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகள் குறிப்பிடுவது போல, இரண்டு ஏக்கர் காணியில் அவரது இராச்சியம் அரசோச்சியது. சுற்றிவரத் தோட்டப்பயிர்கள் காய்த்துப் பூத்துக் கலகலக்கும். காணியில் ஆழமான கிணறு இருந்தது. நிலத்தடி நீர் பயிர்களுக்குச் செழிப்புட்டியது. வீட்டைச் சுற்றிப் பூந்தோட்டம். வண்ண வண்ண ரோஜாச் செடிகளை கயல்விழி வளர்த்திருந்தாள். குரோட்டன் செடிகளைத் திட்டமிட்டுக் கச்சிதமாக நட்டிருந்தாள். பூஞ்செடிகள் பூத்திருக்கும். இடையிடையே கத்தரி, மிளகாய் கண்சிமிட்டும். கலப்புப் பயிர்ச்செய்கையில் நாட்டம் அவளுக்கு. மரவள்ளிச் செடிகள் ஒரே மட்டமாக அழகாக வளர்ந்திருக்கும். இராசவள்ளிக் கொடிகள் சிறு தடிகளைச் சுற்றிப் பின்னிப் படர்ந்திருக்கும். வீட்டுத்தோட்டம் மேலதிக வருவாயைக் கொடுத்தது.
கட்டைபறிச்சான் நாகதம்பிரான் கோயில் பெருமைவாய்ந்தது. உற்சவ காலங்களில் திருகோணமலை மாவட்டக் கிராமங்களில் இருந்து மக்கள் வருவார்கள். நேர்த்தி வைத்தவர்கள் பயபக்தியோடு விரதமிருந்து பொங்கலிடுவார்கள். இனசனங்கள் தங்கள் உறவுகளோடு சேர்ந்து கொள்ளும் நிகழ்வாக விளங்கியது. இரவு முழுவதும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். வீரசிங்கம் குழுவினரின் வில்லுப்பாட்டு ஊரைக்கலக்கி எடுக்கும். அன்னலக்சுமி, சந்தானலெக்சுமி குழுவினரின் இசைமழை உள்ளங்களைக் கவர்ந்தெடுக்கும். அந்தக்குழுவில் அம்பிகாவோடு கயல்விழியும் சேர்ந்து பாடுவாள். பல்லிசை விற்பன்னர் விபுணசேகரத்தின் பல்லிய வாத்தியக் கருவிகளின் இன்னிசை காற்றில் பரவும்.
‘கத்தும் கடலும் கவிபாடித் தாலாட்டும்முத்தம் எங்கள் மூதூர் பிரதேசத்தின் கட்டைபறிச்சானில்காலிடறும் பக்கமெல்லாம்இசைபரந்து களிப்பூட்டும்.இளந்தென்றல் பரவிவரும்கட்டை பறிச்சானைத் தழுவிவரும் பூங்காற்றுப்பட்டாலே போதும் பாட்டு வந்து கூத்தாடும்காலாற வீதிகளில் கதைத்து நடந்தாலே கொண்ட மனக்கவலைகுலைந்தோடிப் போய்விடுமாம்’
எனக் ‘கேணிப்பித்தன் கவிவரி’களைக் கட்டைபறிச்சான் கனகசிங்கம் பாடி அசத்துவார்.
அந்தக் கவிதை வரிகளை அசைபோட்டுப் பார்த்தாள். என்ன அற்புதமான காலம். எல்லாம் கனவாகிப் போய்விட்டன. கிராமத்தின் வாழ்க்கை முறை ‘கல்லெறிபட்ட தேன் கூடாகக்’ கலைந்து போயிற்று. அவளது எண்ணத்தறி கப்பலின் அசைவால் சிதறியது. “அம்மா! இந்த இடத்தில்தான் லோஞ் புரண்டது. கனபேர் செத்தவங்கள்.” கயல்விழி நினைவு கூர்ந்தாள். தங்கத்துக்குப் பயம். “அதையேன் நினைக்கிறாய். அந்தக் கோணேசரை நினைத்துக் கொள். ஓன்றும் வராது”. அவளுக்கு உள்ளுரப் பயம். ஆனால் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாது மகளின் சிந்தனையை வேறு பக்கம் திசைதிருப்ப முனைந்தாள்

கும்பம் 2010



கும்பம் 2010





கும்பம் 2010









சம்பூர் மக்களின் அவலம்

E-mail Print PDF

திருமலை மாவட்டத்திலுள்ள சம்பூர் பகுதியிலிருந்து ஐந்து வருடங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட மக்கள் தம்மை மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியேறுவதற்கு அனுமதிக்குமாறு கேட்டுள்ளார்கள். தற்போது முகாம்களில் சொல்லெணாத் துயரங்களை தாம் அனுபவித்துவருவதாகவும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறுவதன் மூலமாக மட்டுமே தமது எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள முடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்கள்.


போர் ஆரம்பமான பின்னர் சம்பூர் பகுதியிலுள்ள மக்கள் உடுத்த உடைகளுடன் 2006ல் வெளியேறினற். பின்னர் இப்பகுதியில் அனல் மின் நிலையம் ஒன்றை இந்தியாவின் உதவியுடன் அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ள அரசாங்கம் அந்தப் பகுதியை அதி உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. இதனால் நான்குக்கும் அதிகமான கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த ஐந்து வருட காலமாக முகாம்களிலேயே வசிக்கின்றார்கள்.

சம்பூர் பிரதேச இடம்பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கப் பிரதிநிதிகள் குழுவினர் கிளிவெட்டி, பட்டித்திடல், மணற்சேனை மற்றும் கட்டைபறிச்சான் பகுதிகளிலள்ள நலன்புரி முகாம்களில் அடிப்படை வசதிகளின்றி துன்புற்று இடம்பெயர்ந்த நிலையில் வாழும் சம்புபூர் கிழக்கு, சம்பூர் மேற்கு, நவரெத்தினபுரம், கூனித்தீவு மற்றும் கடற்கரைச்சேனை ஆகிய கிராம சேவகர்கள் பிரிவிற்குட்பட்ட மக்களை சந்தித்து அவர்களுடைய நிலைமைகளையிட்டு ஆராய்ந்துள்ளது. தங்களது உறவுகளுடன் சுக, துக்கங்களை கேட்டறிந்த சங்க பிரதிநிதிகளிடம் இம்மக்கள் தாங்கள் தற்போது எதிர்நோக்கும் பல பிரச்சினைகளைப் பட்டியலிட்டனர்.

அவற்றுள் முக்கியமானவையாக தொழில் வாய்ப்பின்மை, பிள்ளைகள் கல்வி கற்பதற்கான ஒழுங்கான கட்டுமானங்கள் மற்றும் தேவையான உபகரணங்கள் இல்லாமை, குடிநீர்த் தட்டுப்பாடு, குளிப்பதற்கான நீர் தட்டுப்பாடு, பொருட்கள் விலையேற்றத்திற்கமைவாக வருமானம் இல்லாமை, உலக உணவுத் திட்ட உலர் உணவுப் பொருட்கள் அனைத்து உணவுத் தேவைகளையும் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லாதிருக்கின்றமை, மற்றும் கட்டைபறிச்சான் நலன்புரி நிலையத்தில் பொது மின் விளக்குகள் இல்லாத காரணத்தினால் இரவில் பாதுகாப்பு இன்மை போன்றவை முக்கியமானவையாகக் காணப்படுகின்றன.

அத்துடன் கடந்த யுத்தத்தில் தாங்கள் முதன்முதலாக இடம்பெயர்ந்த போதிலும் தேர்தல்களின் பின்னர் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட தமது நிலையினை அறிவதற்கு தம்மை வந்து பார்வையிடவில்லை எனவும் இம்மக்கள் தெரிவித்ததாக அறிய முடிகின்றது.

இடம்பெயர்ந்த மக்களை பார்வையிட இந்தியாவில் இருந்து வருகை தந்த இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், வடக்கில் மெனிக்பாம் முகாமில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்களை சந்தித்தபோதும் நீண்டகாலமாக கிழக்கின் திருக்கோணமலை மாவட்டத்தின் கிளிவெட்டி, பட்டித்திடல், மணற்சேனை, கட்டைபறிச்சான் ஆகிய நலன்புரி முகாம்களில் கடந்த ஐந்து வருடங்களாக இடம்பெயர்ந்து வாழும் எங்களை பார்வையிடாமல் கோணேசர் பெருமானை வழிபட்டுவிட்டும், ஏனைய அரச அதிகாரிகளை சந்தித்துவிட்டு சென்றுள்ளமை தமக்கு ஏமாற்றமளித்திருப்பதாகத் தெரிவித்தனர்.

அத்துடன் இதுவரை காலமும் வழங்கப்பட்டுவரும் உலக உணவுத் திட்டத்தின் உலர் உணவு நிவாரணமும் எதிர்வரும் மார்கழி மாதத்துடன் நிறுத்தப்படும் என உரிய அதிகாரிகளால் உரிய நலன்புரி நிலையங்களில் வாழும் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த அறிவிப்பு தம்மை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தம்மை தமது சொந்த சொந்த பிரதேசமான சம்பூரில் மீளக் குடியேற்றப்படாமல் தொடர்ந்தும் முகாம்களுக்குள்ளெயே வைத்திருப்பதால் எதுவிதமான தொழில் வாய்ப்புக்களுமின்றி வாழ்வாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்கியிருக்கும் தமக்கு இந்நிவாரணம் தொடர்ந்து கிடைப்பதற்கு உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அம்மக்கள் தாம் காலம்காலமாக வழிபட்டு வந்த சம்பூர் பத்திரகாளி அம்மாவையும், கூனித்தீவு வட பத்திரகாளி அம்மாவையும், சம்பூர் அரசடி விநாயகரையும், சம்பூர் நாகதம்பிராணையும், சம்பூர் விநாயகரையும், கடற்கரைச்சேனை சம்புக்களி பத்தினி அம்மனையும் சென்று வழிபடுவதற்கு உரிய ஆவன செய்யப்பட வேணடும் எனவும் தமக்குச் சொந்தமான சம்புக்குள வயல்வெளி, வீரக்குட்டியார் வயல்வெளி, செம்மணையான் குளம் வயல்வெளி, மொட்டையாண்டிக் குள வயல்வெளி, பெரியாரப்பற்றை வயல்வெளி, ஆலங்குளம் வயல்வெளி, கொக்கட்டி வயல்வெளி, தொடுவான்குள வயல்வெளி, பெரிய நையந்தை வயல்வெளி, சின்ன நையந்தை வயல்வெளி, மற்றும் கட்டக்காடு வயல்வெளி முதலிய வயல் பிரதேசங்களில் நெற் செய்கையை தாங்கள் முழுமையாக மேற்கொள்வதற்கு வழிசெய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கின்றார்கள்

Thursday, 7 October 2010

கஞ்சா ரொட்டியும் காடேறி பிசாசுகளும்

எங்கள் கிராமத்து
சின்னச் சாமிகளுக்கு
வருடமொரு முறை நாமெலாம் கூட
நடக்கும் கூடார மடை

சாட்டையை நீட்டிப் பிடித்து
பூசாரிகள் மந்திரம் சொல்ல
அகோர முகத்தோடு உருவேறி ஆடும்
சின்னச் சாமிகள.

கஞ்சா ரொட்டியும்
சாராயப் போத்தலும்
கறுத்தச் சேவலும்
பலிமடையில் கிடக்க

காடேறியும் கரையாக்கனும்
ஊத்தை குடியனும் கபாள வைரவனும்
சுற்றி நிற்கும் பரிவாரங்களும்
படையலுக்குப் போட்டியிட்டு
உருNறி ஆடும்

பிசாசுகளெல்லாம்
கஞ்சா ரொட்டிக்குப் பின்னால் அலைந்து
பிய்த்துக்கிழித்து சப்பி விழுங்கும்
கறுத்தச் சேவலை தலையால் கடித்து
இரத்தம் உறிஞ்சும்
காலம் மாறி…….

இன்று
நாங்கள் பலிமடையில் கிடக்க
பிசாசுகள்
வேப்பிலை எறிந்து இரும்புகள் ஏந்தி
கள்ளப் பூசாரிகளின்
மந்திரம் கேட்டு
எம்மை ஓட ஓட விரட்டி
சொத்தழித்து உயிர் குடிக்க
நரபலிக்காய்
எப்போதும் காத்திருக்கிறது
கூடார மடை

இன்று
கஞ்சா ரொட்டியாய்
நாங்கள்……..
காடேறிப் பிசாசுகளாய்
அவர்கள்……!

குஞ்சு பறிகொடுத்த தாய்ப் பறவை

ஏழையாய்ச் சபிக்கப்பட்ட
என் வயிற்றில் பிறந்து
மலையாய் வளர்ந்தவனே…….!
எட்டுத்திக்கும் தேடிவிட்னே உன்னை….
எங்கே இருக்கிறாய்
என் அழு குரலும் எட்டாத
தூரத்துள்..!

நேற்றிரவும்
என் கனவில் நீதான்
நீயின்றிக் கனவில் இப்போது
வேறு பொருள் தெரிவதில்லை
உன்னுருவம் கனவில் தெரிகின்ற
இரவெல்லாம் ஊரே கூடிவிடும்
என் ஒப்பாரி ஒலி கேட்டு……….

அம்மா நான்
பட்டினியால் துடித்தாலும்
விறகு விற்றும் கூலிஜ வுலை செய்தும்
உன் உடலை வளர்த்த கதை
நான் அறிவேன் நீயறிவாய்
பாதகர்கள் அறிவாரோ…..?

உயிர் காக்க வந்த நம்மை
ஏன் பிரித்தான் கடவுள்…..
என் தொங்கல் சேலையில்
பற்றிப்பிடித்திருந்த உன்னை
பறித்தெடுத்துப் போனாரே
யமன் உருவில் பாதகர்கள்……..
கடசியாய் நீ கடித்த சோளங் கதிர் கூட
இப்போதும் என்னிடத்தில் உளுத்துப்போய்………!

என்ன சொல்லி அழுதிருப்பாய்
அடிவாங்கும் போது…..
அம்மாவை அழைத்திருப்பாய்
பதறுதடா மனது…….
உன்னினைவில் அழுதழுது
உயிரின்றி உலாவுகின்றேன்.
நான் உன்னை
தேடாத இடமில்லை
கேக்காத ஆழில்லை
சாத்திரிகள் சொன்னார்கள்
நீ உயிரோடிருப்பதாய்…!
என் கருவில் வந்தவனே
அழுகுரலும் கேட்காதா உன் காதில்…..
சத்தியமாய்ச் சொல்கிறேன் மகனே..!
இன்னும் நானுனக்கு
சாக்கிரியை செய்யவில்லை……!

அறியப்படாத போதும் அறியப்பட்ட போதும்

எல்லாம் நிறைந்து
பூரணமாகிய
சம்பூர் மண்ணை
வேறுலகம் அறியாது
நாங்கள் மட்டும்
அறிந்த போது
அங்கிருந்தோம் நாம்….

சம்பூரே செய்தியாகி
ஊலகத்திசையெல்லாம்
ஓலித்த போது….
என் இனிய தாய் நிலமே
நாங்கள் உன்னோடில்லை
இன்று தனித்திருக்கிறாய் நீ…
உன் பிள்ளைகளின்
சுவடுகளை மட்டும் சுமந்தபடி……

களவாடப் பட்ட விடுமுறை நாட்கள்

விடுமுறை நெருங்க
மனதில் நீளும் நிகழ்ச்சிப்பட்டியல்
ஆடைகள் அடுக்கபட்டு
முன் பதிவு செய்து பொண்டது போல்
தயாராகும் பயணப்பொதி

உறவுகள் எல்லோருக்கும் பொருட்கள்
ஏற்கனவேஇலக்கமிடப்படடிருக்க……….
ஊடம்பெல்லாம் சிறகுமுளைத்து
இறுதிப்பரீட்சையை எதிர்பார்த்து
தவம் கிடக்கும் விழிகள்.

கூட்டத்துடன் பேரூந்தில் அமர்ந்தாலும்
வீடு போய்ச்சேரும் வரை
வீதியை அளந்து கொண்டே வரும் எதிர்பார்ப்பு
என் வவுக்காய் காத்துக்கிடக்கும்
தாய்நிலம்.

வீட்டின் படலை திறக்க
அம்மாவை முந்தி வந்து
தோளில் பாயும் நாய்க்;குட்டி
பயணக்களைப்பே காணாமல் போகும்
காளிகோயிலும் வயல் வெளியும்
சொந்தங்களின் வீடும்
சொல்லாமலே பருகிவிடும் நாட்களை

என் வரவை அறிந்ததும்
நிழல்வாகைச் சந்தியில் குந்தி
ஊர் வம்பளக்க
நக்கலடித்து உரக்கச் சிரிக்க
ஊர்க்கதைகளை சுமந்தபடி
சூழ்ந்து கொள்ளும் நண்பர் கூட்டம்
வீடு களைகட்டிக்கிடக்கும்

வேலன்ர பெட்டை கூட்டிட்டு ஓடியது
பக்கத்து வீட்டுக் காதல் கல்யாணம்
ஏல்லா விபரமும் காதில் எட்டும்……
குளத்து வெட்டையில் பாட்டியும் நடக்கும்
மறுநாள் சிரித்து வயிறு வெடிக்கும்
இப்படி……
முப்பது நாள் விடுமுறை ஊரில்
நிமிடம் போல் கரையும் வாழ்க்கை வசிகரம்தான்

நீண்ட நாட்களின் பின்
நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது
என் மனம் செத்துக்கிடந்தது
முன்பு போல எல்N;லாரும் தயாராகினர்
விடுமுறை கழிக்க……
என் பயணப்பொதி மட்டும்
விறைத்துக்கிடந்தது வெறுமையாய்
வலிகளின் வடிவான
அகதிக்கூடாரத்தினுள் விடுமுறை
எப்படி வசிகரமாய்த் தோன்றும் என்ற ஏக்கத்தோடு……

வரலாற்றுள் வாழும் பாக்கியம்

எங்கள்
வீட்டின் கூரை நீக்கி
எந்த விடியலும் இதுவரை
எட்டிப் பார்க்க வில்லை…..

எங்கள் பிள்ளைகள்
பாடசாலை செல்கிறார்கள்
ஆசிரியரிடம் இன்பம் என்பதற்கு
அர்த்தம் கேட்டு……
சுதந்திரத்திற்கு சொல்
விளக்கம் கேட்டு……
இவற்றுக்கெனல்லாம் அர்த்தம் தெரியாமலே
வாழப் பழகிக் கொள்கிறது
எங்கள் சந்ததி……

துன்பமும் அவலமுமே
எமக்கு நெருக்கமானவை
எம்மோடு உறவாடுபவை…….
எனினும் வாழப் பழகிக் கொண்டோம்
விதியை நொந்து கொண்டு……..!

ஒரு வகையில்
பெருமிதமடைகிறோம்
துன்பத்துள் வாழ்கிறோம்
என்பதற்கப்பால்
ஒரு வரலாற்றுக்குள்
வாழப்பிறந்ததை எண்ணி……

ஒரு நிமிடமாவது நானாகு

திரும்பத் திரும்ப

எத்தனை முறை கட்டியும்

நீ விடுவதாயில்லை

சம்மந்தமில்லாமலும் காரணமில்லாமலும்

என் வீட்டை

இடித்துக் கொண்டே இருக்கிறாய்

முற்றத்தில் கட்டி

புல்லிட்டு வளர்த்து

பால் ஈணும் பசுக்கள்

உன்னை அறியா…….

குடல் வெளிக் கிளம்ப அவை

உன்னைக் கோலியதுமில்லை

நீயோ அவற்றின் குடல் சிதறி

கபாளம் பிளக்கும் படி செய்கிறாய்

வயல் நிலம் உனக்கு

ஒன்றும் செய்யவல்லை

உழுது கிளறி நெல் விதைத்து

வயிறு நிரப்பும் சேற்று வயலில்

செல் விதைக்கிறாய்

முலை சப்பும்

எனது சின்னக் குழந்தை

பட்டினிக்குப் பழகவில்லை எனினும்

அதன் தாயைப் பறித்த பசியில்

துடிதுடிக்க வைக்கிறாய்……

எல்லாவற்றுக்கும் மேலாய்

தாய் நிலத்திலிருந்து அகதியாய் துரத்தியிருக்கிறாய்……

இப்படியே தொடர்கிறது உன் அனியாயங்ள்

வேதனையின் மொத்த வடிவாய் உலவும் நான்

விதியைத் தவிர

ஒரு கணமேனும்உன்னைத் திட்டியதில்லை

ஒரேயொரு முறை

ஒரு கணப்பொழுதேனும்

அடுத்தவன் வேதனையை

உனதாக்கிப் பார்க்கும் திராணி

உன் மனதுக்கிருந்தால்

ஒருநிமிடம்…ஒரே நிமிடம்

நானாக வாழ்ந்து பார்


பத்தினியன் சஜந்தன்

தோழனுக்காய் ஒரு தோழனின் காத்திருப்பு


பால்ய வயதுத் தோழா

83 களில் எம்மவர்கள் நிர்வாணமாய்

எரியுண்ட போது

நானும் நீயும் ஏதுமறியாது முலை சப்பினோம்

87 களில்

எனதும் உனதும் வீடுகள் எரிந்து

வீதியில் பிணங்கள் கிடக்க

நம் தண்ணீர்த் துப்பாக்கி எரிந்து போனதற்கு

அழுது தொலைத்தோம்

7.7.90 இல்

ஊரே தலை தெறிக்க ஓட

நாமும் புத்தகப் பையுடன் வீட்டுக்கு ஓடினோம்

மறுநாள் நம்மூர் சுடுகாடாய் மாற

நூறு பிணங்கள் எரிந்து கிடந்தது

அன்றும் புதினம் பார்ப்பதைத் தவிர

எதுவும் புரியவில்லை

மீசை அரும்பிய வயதில்

கொஞ்சம் புத்தி தெரிய

படு கொலைகளில் கொல்லப்பட்டவர்களில்

எனக்கும் உனக்கும் பரிட்சயமான

பள்ளித் தோழியின் அப்பாவும் அண்ணாவும்

என்றறிய சற்றே கலங்கினோம்

அன்று அந்தக் கலக்கமும் தோழிக்காகத்தான்…….

மீசை கறுத்த காலத்தில்

நம்மூரில் நடந்தேறிய மரணங்கள்

நம்மிருவரையும் உலுப்பிப்போட்டது….

அப்போது ஒரு தோழிக்காக மட்டும்

கவலைப் பட வில்லையென்பது

எனக்கும் உனக்கும் தெரிந்த கதை

அவை நமக்குள் ஒரு புறமாக இருக்கட்டும்…

இது தாடி முளைத்து கறுத்துப் போன வயது

நீ ஊரில் இருந்தாய் நான் அங்கில்லை

2006.4.26 அன்று

ஊரே சுடுகாடாகி பின் பாலை வனமாகி

உயர் பாதுகாப்பு வலயமாய் மாற

நம்முறவுகள் உயிரோடு

தூக்கியெறியப்பட்டனர் தொலைவில்

நெத்தியில் அகதி முத்திரை குத்தி

உப்புச் சப்பற்றிருந்த மனதுடன்

உன்னை எதிர்பார்த்தேன்

கூட்டம் கூட்டமாய்த் தேடினேன்

எல்லோரும் வந்தார்கள்

பொய்த்துப் போனது என் காத்திருப்பு

நீதான் தோழா வரவில்லை

நீ வரமாட்டாய்………

எனக்குத் தெரியும்தானே

உனக்கு

மீசை முளைத்துத் தாடி படர்ந்த வயதென்று

அதனால் நீ வரமாட்டாய்……..

என் பிரிய தோழனே..!

நம்பிக்கையிழக்கவில்லை நான்

என்றோ ஒரு நாள்

நம் ஊரின் எல்லையில் நின்ற படி

என்னைக் கூவி அழைப்பாய்

அப்போது வருகிறேன்

ஆயிரம் கவிதைகளுடன்

உன்னைக்

கட்டித் தழுவிஆனந்தக் கண்ணீர் வடிக்க…..


Pathiniyan Sujanthan

இலவங் கிளியும் நாங்களும்


முற்றத்தில் பெருத்து வளர்ந்த

இலவை மரத்தில்

காலங்காலமாய்க் கிளிகள்

இலவம் பழம் தின்ன……!

அன்று

தாய்க்கிளி காத்திருந்து

ஏமாந்த போக

நேற்று மகள் கிளியும் ஏமாந்து போனது

அசட்டுத்தனமான நம்பிக்கையில்

இன்று

மகள் கிளி பொரித்த குஞ்சுக்கிளி கிளையில்

நாளைக்காய்

கூட்டில்குஞ்சிக் கிளி பொரித்த முட்டை

இப்படியே தெடர்கிறது

கிளிச் சந்ததியின் இலவை காத்தல்………

நேற்றுத்தான் அறிந்தேன்

முப்பாட்டனும் பாட்டனும்

ஏன் அப்பாவும்

குந்தியிருந்த இலவை மரத்தின் கீழ்

நானும் இருப்பதாய்

நாளை

என் பிள்ளையும் குந்தியிருக்க முன்

இப்போதே சொல்லி வைக்க வேண்டும்

என் பாட்டன் முப்பாட்டன் கதையை அவனிடம்………


ப.சஜந்தன்

வெள்ளைப் புறாவும் அண்டங்காக்கையும்.

வெள்ளைப் புறாவும் அண்டங்காக்கையும்.

தீனி பொறுக்கத் தெரியாத

குயில் குஞ்சொன்றை

அண்டங்காக்கைகள் முற்றத்தில்

கொத்திக் கிழித்த போது அழுது முடித்திருந்தேன்…

காக்கையின் கூட்டில்

குயில்முட்டையிடுவதாயும்

காக்கையின் சூட்டில்

குயில் குஞ்சு பொரிப்பதாயும்

பின்னாளில் அறிந்து கொண்டேன்..

ஒரு காலைப் கொழுதில்

இடைவெளியற்றிருந்த எங்கள் வீட்டின் கூரையின்

நெருக்குவாரங்களை நீக்கி

சின்ன இடைவெளியில்

வெள்ளைப் புறா ஒன்று

கூடு கட்டியதாய் ஞாபகம் எனக்கு..!

தீனி பொறுக்கச் செல்லும்

மாலை கூடு திரும்பும்

அழகான அந்த வெள்ளைப் புறாவின்

வாழ்கையை சில நாட்களேனும்

ரசித்ததாய் எனக்குள் ஒரு உணர்வு

சில காலம் புறா

தீனி பொறுக்கச் செல்லாத கவலையில்

மேசைகளை அடுக்கி

ஒரு நாள் எட்டிப் பார்த்தேன்

மூன்று முட்டைகளை அடைகாத்திருந்தது புறா…!

சில காலம் கழிக்க

குஞ்சுகளின் கீச்சொலி கேட்டு

மீண்டும் கூட்டை எட்டிப் பார்த்தேன்

இட்டதென்னவோ புறா முட்டைதான்

பொரித்துக் கிடந்தன

பாம்பொன்றும்;;;;…..பருந்தொன்றும்…பச்சோந்தியொன்றும்.

வன்முறையற்ற வெள்ளைப் புறா

காக்கை போல் குஞ்சுகளை

கொத்திக் கிழிக்காமல்

பறந்து போயிருந்தது கூட்டை விட்டு….

நேற்று

மேசைகளை அடுக்கிகூட்டை உற்றுப் பார்த்தேன்

என்னைப் பய முறுத்திய படி

மூன்று முட்டைகள்.

சஜந்தன். சம்பூர்