Thursday, 7 October 2010

ஒரு நிமிடமாவது நானாகு

திரும்பத் திரும்ப

எத்தனை முறை கட்டியும்

நீ விடுவதாயில்லை

சம்மந்தமில்லாமலும் காரணமில்லாமலும்

என் வீட்டை

இடித்துக் கொண்டே இருக்கிறாய்

முற்றத்தில் கட்டி

புல்லிட்டு வளர்த்து

பால் ஈணும் பசுக்கள்

உன்னை அறியா…….

குடல் வெளிக் கிளம்ப அவை

உன்னைக் கோலியதுமில்லை

நீயோ அவற்றின் குடல் சிதறி

கபாளம் பிளக்கும் படி செய்கிறாய்

வயல் நிலம் உனக்கு

ஒன்றும் செய்யவல்லை

உழுது கிளறி நெல் விதைத்து

வயிறு நிரப்பும் சேற்று வயலில்

செல் விதைக்கிறாய்

முலை சப்பும்

எனது சின்னக் குழந்தை

பட்டினிக்குப் பழகவில்லை எனினும்

அதன் தாயைப் பறித்த பசியில்

துடிதுடிக்க வைக்கிறாய்……

எல்லாவற்றுக்கும் மேலாய்

தாய் நிலத்திலிருந்து அகதியாய் துரத்தியிருக்கிறாய்……

இப்படியே தொடர்கிறது உன் அனியாயங்ள்

வேதனையின் மொத்த வடிவாய் உலவும் நான்

விதியைத் தவிர

ஒரு கணமேனும்உன்னைத் திட்டியதில்லை

ஒரேயொரு முறை

ஒரு கணப்பொழுதேனும்

அடுத்தவன் வேதனையை

உனதாக்கிப் பார்க்கும் திராணி

உன் மனதுக்கிருந்தால்

ஒருநிமிடம்…ஒரே நிமிடம்

நானாக வாழ்ந்து பார்


பத்தினியன் சஜந்தன்

No comments:

Post a Comment